நாங்கள் பேசுவதற்காக அல்ல; இது நீங்கள் பேசுவதற்காக நடத்தும் கூட்டம்: ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் 

நாங்கள் பேசுவதற்காக அல்ல; இது நீங்கள் பேசுவதற்காக நடத்தும் கூட்டம் என்று கொரட்டூர்  ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
நாங்கள் பேசுவதற்காக அல்ல; இது நீங்கள் பேசுவதற்காக நடத்தும் கூட்டம்: ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் 

கொரட்டூர்: நாங்கள் பேசுவதற்காக அல்ல; இது நீங்கள் பேசுவதற்காக நடத்தும் கூட்டம் என்று கொரட்டூர்  ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்திலும், அதன்பின்னர் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். கழகத் தலைவர் அவர்கள் ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து:

பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஊராட்சியில் நடைபெறும் திமுக ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும் என்று, நாங்கள் எடுத்து வைத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நீங்கள் எல்லோரும் ஆர்வத்தோடு வந்திருக்கின்றீர்கள், மகிழ்ச்சியோடு வந்திருக்கின்றீர்கள், உங்களுடைய புன்சிரிப்பை எல்லாம் பார்க்கின்ற போது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இந்த கொரட்டூர் ஊராட்சி சபைக் கூட்த்திற்கு எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு வந்திருக்கக்கூடிய உங்கள் எல்லோரையும் நான் இன்முகத்தோடு வருக – வருக – வருக என வரவேற்கின்றேன். இந்த ஊராட்சி சபைக் கூட்டம் எதற்கென்று கேட்டீர்கள் என்றால், உங்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைக்க, உங்களுடைய குறைகளை தீர்த்து வைக்க, அதைக்கேட்டு அதற்குரிய பரிகாரத்தைக் காண இந்தக் கூட்டம் பயன்படப் போகின்றது.

இந்தக் கூட்டம் என்பது கட்சிக்காக நடத்தக்கூடிய கூட்டம் அல்ல. கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேசப்போவது கிடையாது. மக்களாகிய நீங்கள் பேசுவதற்காகத்தான் இந்த ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்படுகின்றதுஎன்னைப் பொறுத்தவரைக்கும் எல்லா கிராமத்திற்கும் எல்லா ஊராட்சிக்கும் போக முடியாது. இடைத்தேர்தலை சந்திக்கின்ற தொகுதிகளுக்கு மட்டும் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

பூந்தமல்லி தொகுதி போன்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.  18 தொகுதிகளிலும் ஒரு வருட காலமாக எம்.எல்.ஏ இல்லாமல் ஒரு அனாதைத் தொகுதியாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே, இந்த நிலையில் தான் 21 தொகுதிகளிலும் என்னுடைய பயணத்தை மேற்கொண்டு, இந்த கிராமசபைக் கூட்டத்தை மட்டும் நடத்தவில்லை. இந்த பூந்தமல்லியின் பாக முகவர்களையும் சந்திக்கப் போகின்றேன். அவர்களை சந்தித்து, பாக முகவர்கள் தேர்தல் வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அனைத்தும் முறையாக இருக்கின்றதா என்று அதையும் சரிபார்க்கப் போகின்றேன்.

மகாத்மா காந்தி அவர்கள் அடிக்கடிச் சொல்லுவார்கள் கிராமங்கள் தான் கோவில் என்று. ஆகவே, நான் இந்தக் கோவிலைத் தேடி நான் ‘ஒரு பக்தனாக உங்களைத் தேடி நாடி’ வந்திருக்கின்றேன். இது ஏதோ நாங்கள் பேசுவதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல, நீங்கள் பேசுவதற்காக நடத்தும் கூட்டம். கட்சி நிர்வாகிகள் பேசுவதற்கு செயற்குழு கூட்டம் இருக்கின்றது, பொதுக்கூட்டம் இருக்கின்றது. எனவே, இந்தக் கூட்டத்தை நீங்கள் எல்லோரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தமிழ்நாடு முழுக்க இருந்து கொண்டிருக்கின்றது. நான் சென்ற கிராமங்களில் எல்லாம் அதிகமாக சொன்னது 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பிரச்னை. அதற்கு முறையாக கொடுப்பதில்லை, அடுத்து மகளிர் சுய உதவித் திட்டம், இதற்காகத் தான் இந்த ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்துகிறோம்.

இங்கு இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர்கள், கட்சியினுடைய முன்னோடிகள், நிர்வாகிகள் எல்லோரும் உங்கள் பிரச்னைகளையெல்லாம் அவர்களிடத்தில் கொடுத்து, முடிந்தால் நானே மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் பேசி, என்னென்ன பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியும் என்று செய்யச்சொல்லி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கின்றது. அந்த உரிமையோடு நான் கேட்பேன் இங்கு வந்திருக்கக்கூடிய கூட்டத்தை பார்க்கின்ற போது உள்ளபடியே நான் பெருமைப்படுகின்றேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஸ்டாலினிடம் மக்கள் தங்கள் குறைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com