மின் திருட்டு: போலீஸில் புகார் அளிக்கப்படுவது இல்லையா? : உயர்நீதிமன்றம் கேள்வி

மின்சார திருட்டு தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்படுவதில்லையா என மின்சார வாரியத்திடம்
மின் திருட்டு: போலீஸில் புகார் அளிக்கப்படுவது இல்லையா? : உயர்நீதிமன்றம் கேள்வி


மின்சார திருட்டு தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்படுவதில்லையா என மின்சார வாரியத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் மின்சார திருட்டு தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மின் வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,  மின்சார திருட்டு தொடர்பான புகார்களில், திருடப்பட்ட மின்சாரத்தை கணக்கிட்டு அதில் 50 சதவீதத் தொகையை வசூலித்து விட்டு அந்தப் பிரச்னை முடித்து வைக்கப்படும் என தெரிவித்தார்.     அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மின்சாரத்தை திருடுவதற்கும், தங்கம் உள்ளிட்ட பிற பொருள்களைத் திருடுவதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. திருட்டு என்பது குற்றமாகும். எனவே, அந்த திருட்டு தொடர்பாக வழக்குப்  பதிவு செய்யாமல் எப்படி அந்தக் குற்றத்தை முடித்து வைக்க முடியும். மின்சார திருட்டை கணிப்பது யார்? மின்சாரம் திருடியவர்களிடம் இருந்து எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறதுஎனக் கேள்வி எழுப்பினார். 
அப்போது மின்சார வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், உதவி செயற்பொறியாளர் மின்சார திருட்டைக் கணக்கிட்டு திருடியவர்களிடம் இருந்து 50 சதவீதத் தொகையை வசூலித்து விட்டு, அந்தப் பிரச்னையை முடித்து வைப்பார் எனத் தெரிவித்தார். 
அதைக் கேட்ட நீதிபதி, ஒரு தொழிற்சாலை ரூ.5 கோடி மதிப்பிலான மின்சாரத்தை திருடிவிட்டால், அவர்களிடம் இருந்து ரூ.2.50 கோடியை பெற்றுக்கொண்டு மின்சார திருட்டு பிரச்னையை விட்டு விடுவீர்களா? மின்சார திருட்டு தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க மாட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அப்போது மின் வாரியம் சார்பில் ஆஜரான  வழக்குரைஞர், காவல்துறையில் புகார் அளிப்பது இல்லை, மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரே சமரசம் செய்து வைத்து விடுவதாகத் தெரிவித்தார். 
இதற்கு நீதிபதி, இவ்வாறு இருந்தால் மின்சார வாரியம் எப்படி லாபகரமாக இயங்கும், போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகள் நஷ்டத்தில் இயங்குகிறது. இதுபோன்ற விவகாரங்களில் உதவி செயற்பொறியாளர் சமரசம் செய்யும் அதிகாரம் கொண்டவராக இருந்தால், இதுபோன்ற நடவடிக்கைககள் ஊழலுக்கு வழி வகுக்காதா? திருட்டு என்றால் அது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டுக் குற்றத்தை ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. மின்சார திருட்டில் ஈடுபட்டவர்களிடம் பாதி  தொகையை வசூலித்துவிட்டு திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியுடன் அதிகாரிகள் எப்படி சமரசமாக செல்ல முடியும்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இந்த கேள்விகளுக்கு மின்வாரியத் துறைச் செயலாளர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக அரசு சிறப்பு வழக்குரைஞர் தம்பித்துரையை நியமிப்பதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com