அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடப்போகும் பாஜக வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழகத்தில் இரு தினங்களாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக அரசியல்
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடப்போகும் பாஜக வேட்பாளர்கள் யார் தெரியுமா?


தமிழகத்தில் இரு தினங்களாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு அறிக்கையை வெளியிட்டபோது, இது தமிழகம்-புதுவைக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எதிர்வரும் மக்களவைத் தொகுதியில் பாஜக-அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நிச்சயம் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி அறிவித்திருந்தார்.

கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை என்.ரங்கசாமி சந்தித்துவிட்டு வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ள கட்சித் தலைவர்கள், அதிமுக, பாஜக தலைவர்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், புதுச்சேரியின் பிரதான கட்சியான என்.ஆர்.காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளதா? அவ்வாறு புதுச்சேரி இருக்கும்பட்சத்தில், பாஜக தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது அதிமுக கூட்டணியில் தனியாக ஒரு தொகுதியை கேட்டுப்பெற்று தனது சின்னத்தில் போட்டியிடுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. என்.ஆர். காங்கிரஸுக்கு தனியாகத் தொகுதி ஒதுக்கினால் அதிமுக போட்டியிடும் எண்ணிக்கை மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது. 

இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவின் நிலையை எண்ணி அந்த கட்சியின் தொண்டர்களே கொந்தளிப்பில் இருந்து வரும் நிலையில், யார் எப்படி பேசினால் என்ன, கொந்தளித்தால் என்ன, அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அடிமாட்டு பேரத்திற்கு எங்களுக்கு அடிமைகள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் உள்ள தமிழக பாஜக, தங்களுக்கான  5 தொகுதிகள் எவை?, அதற்கான வேட்பாளர்கள் யார்? என்பதை தேர்வும் செய்யும் பணியை துவக்கி உள்ளது. 

அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி பாஜகவின் 5 தொகுதிகளும், 5 வேட்பாளர்கள் பட்டியலும்:

1. திருச்சி:  தமிழிசை செளந்தரராஜன்
2. கன்னியாகுமாரி: பொன்.ராதாகிருஷ்ணன்
3. திருநெல்வேலி: நைனார் நாகேந்திரன்
4. கோவை: - சி.பி ராதாகிருஷ்ணன்
5. திருப்பூர்: வானதி சீனிவாசன்

இதில், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி வேட்பாளர்களில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. திருச்சி தொகுதியை கைப்பற்ற கருப்பு முருகானந்தமும், திருப்பூர் தொகுதியை தன்வசமாக்க ஹெச்.ராஜாவும் மோதுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முடிவுகள் இறுதியாகும் வரை தமிழக அரசியல் களத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

கூட்டணி எப்படி வேண்டுமானாலும் அமைந்து போகட்டும், யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். ஆனால், வாக்காளர்கள் எல்லாம் ஏமாளிகள், முட்டாள்கள் என நினைத்து தேர்தல் தோறும் கூடுவிட்டு கூடு பாய்ந்து தங்களது குடும்பம் மற்றும் கட்சியின் கஜானாவை நிரப்பிக்கொள்ளும் மானம்கெட்ட அரசியல் கட்சி தலைவர்கள் யார் என்பதை தங்களுக்கான வாக்குகள் மூலம் வெளிச்சமிட்டு காட்டப்போகும் தருணத்திற்காக காத்திருப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com