கொள்கைக் கூட்டணி என்று கூரை மீது ஏறி கூற முடியும்: பாமக மீது பாயும் கே.எஸ்.அழகிரி 

திமுகவுடன் நாங்கள் அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி என்று கூரை மீது ஏறி நின்று கூவி கூற முடியும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
கொள்கைக் கூட்டணி என்று கூரை மீது ஏறி கூற முடியும்: பாமக மீது பாயும் கே.எஸ்.அழகிரி 

சென்னை: திமுகவுடன் நாங்கள் அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி என்று கூரை மீது ஏறி நின்று கூவி கூற முடியும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களது வாக்குகளை நயவஞ்சகமாக கவருகிற வகையில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி வழங்கி மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் 24-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

இந்நிலையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்;சி போட்டியிட 9 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் வாய்ப்பு வழங்குகிற வரலாற்றுப் புகழ்மிக்க ஒப்பந்தம் நேற்று தி.மு. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், நானும் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் திரு. கே.சி. வேணுகோபால், திரு. முகுல் வாஸ்னிக் மற்றும் செயலாளர்கள் திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பெரும் பங்காற்றிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும், தி.மு. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கும் மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் நெஞ்சை உயர்த்தி நாங்கள் அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி என்று கூரை மீது ஏறி நின்று கூவி கூற முடியும். ஆனால் நம்மை எதிர்க்கிற கட்சிகளின் நிலை என்ன ? கொள்கை என்ன ? கடந்த கால அரசியல் அணுகுமுறை என்ன ?

கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை ஆதாரத்துடன் வழங்கியவர் பா.ம.க. இளைஞரணி தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ். அந்த ஊழல் பட்டியலில் முதலாவது குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் ரூபாய் 7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. பல்கலைக் கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் ரூபாய் 320 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி 24 ஊழல் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. பட்டியல் வழங்கி 70 நாட்களுக்குள்ளாக எந்த அ.தி.மு.க. மீது ஊழல் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டதோ, அந்த ஊழல் கட்சியோடு கைகோர்த்து இன்றைக்கு பா.ம.க. நிறுவனர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பட்டிருக்கிறார். கரைபடிந்த கரங்கள் இணைந்துள்ளன. இதைவிட அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா ? சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு மருத்துவர் ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.

வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ம.க.வுக்கு வழங்கி உரிய பாடத்தை தமிழக மக்கள் வழங்குவார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை. 2004 இல் மதச்சார்பற்ற கூட்டணி பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற வெற்றியின் இலக்கை நோக்கி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடங்கி விட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com