மக்கள் நலனுக்காகவே அதிமுக-பாஜக கூட்டணி: தம்பிதுரை

மக்கள் நலனுக்காகவே அதிமுக-பாஜக கூட்டணி உருவானது என்று மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.


மக்கள் நலனுக்காகவே அதிமுக-பாஜக கூட்டணி உருவானது என்று மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
கரூரில் புதன்கிழமை அவர் மேலும் கூறியது: நலத் திட்டப் பணிகளுக்கு திமுகவினர் பூமிபூஜை போடுவார்களே தவிர, பின்னர் மக்களை ஏமாற்ற பூஜ்யம்தான் போடுவார்கள், எந்தத் திட்டப் பணிகளையும் செய்ய மாட்டார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுவதற்கு காரணம், அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலிலோ, மக்களவைத் தேர்தலிலோ வெற்றி பெற முடியாது எனத் தெரிந்துவிட்டதால் அவர் சவால் விடும் பாணிக்கு வந்துவிட்டார்.  எரிச்சல் வந்துவிட்டாலே அரசியல் நாகரிகம் தெரியாமல்  பேசிவிடுவார். 
எங்களது எதிரி திமுக, காங்கிரஸ்தான்.  இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு இந்தக் கட்சிகளே காரணம். தமிழர்களுக்கு துரோகம் இழைத்த அந்தக் கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி.  இதுவரை நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம். அதனால் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களை மத்தியில் இருந்து பெற முடியாமல் இருந்தோம் என்பதை ஏற்கிறோம்.  இப்போது நாங்கள் பாஜகவுடன் நட்புறவாக, கூட்டணியாக உள்ளோம். கூட்டணி தர்மம் என ஒன்றிருக்கிறது. எனவே கூட்டணி என வரும்போது மத்திய அரசிடம் இனி ரூ.15,000 கோடி என்ன 50,000 கோடி கூட பெற்றுவிடுவோம். இந்தக் கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம். 
பாஜக, அதிமுக கூட்டணி என்பது கட்டாயத் திருமணம் என திருநாவுக்கரசர் கூறுவதற்கு அவர் ஒன்றும் புரோகிதர் கிடையாது. அந்தப் பதவிகூட இல்லாமல் அம்போ என இருக்கிறார் என்றார் தம்பிதுரை. பேட்டியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  எம். கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com