மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி கடையடைப்பு: மறியலில் ஈடுபட்ட 950 பேர்  கைது

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டக் கோரி தேவர் இன கூட்டமைப்பினர் கடையடைப்பு
கோரிப்பாளையம் தேவர் சிலை முன் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்பினர்.
கோரிப்பாளையம் தேவர் சிலை முன் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்பினர்.


மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டக் கோரி தேவர் இன கூட்டமைப்பினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன், மதுரை நகரில் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்ட 950 பேர் கைது செய்யப்பட்டனர். 
 கடையடைப்புப் போராட்டத்தையொட்டி கோரிப்பாளையம்  தேவர் சிலை சந்திப்பு, தெப்பக்குளம்,  விமானநிலையம்,  உத்தங்குடி- பாண்டி கோயில் சந்திப்பு, காளவாசல் சந்திப்பு  உள்ளிட்ட பகுதிகளில்  ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடைகள், சந்தைகள் அடைப்பு:  மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தை,  பழச்சந்தை கடைகள் முழுமையாகவும், காளவாசல், ஆரப்பாளையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் பகுதிகளில் பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ரயில் மறியல்...: மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30-க்கு சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த வைகை அதிவிரைவு ரயிலை மறிக்க முயன்ற தேவரின கூட்டமைப்பைச் சேர்ந்த 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 தூத்துக்குடியில் இருந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் சுரேஷ்குமார் தலைமையில், 15 வாகனங்களில் வந்த அக்கட்சியினர் 75 பேர் நாகமலைப் புதுக்கோட்டை  நான்கு வழிச்சாலை அருகே கைது செய்யப்பட்டனர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் அவரது ஆதரவாளர்கள், பாண்டி கோயில் சுற்றுச்சாலை வழியாக வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.அதையடுத்து அவர்கள் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டதையடுத்து, போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைவிடச் செய்தனர்.
கட்சியினர், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு: இதனிடையே கோரிப்பாளையம் பகுதிக்கு வந்த  பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் பி.வி.கதிரவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி.திருமாறன்,  பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், பசும்பொன் கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத் தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை  அணிவித்தனர்.
 பின்னர் கோரிக்கை நிறைவேறும் வரை இறங்கமாட்டோம் எனக் கூறி  மாலை 6 மணி வரை  தேவர் சிலைக்கு மாலையணிவிக்கச் செல்லும் படிகட்டில் நின்றவாறே அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கலைக்க முயன்றபோது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
அரசுப் பேருந்து மீது கல்வீச்சு...:  தபால்தந்தி நகரில் இருந்து பெரியார் நிலையம்  சென்ற அரசுப் பேருந்து வள்ளுவர் காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது அதன் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் கண்ணாடிகள் சேதமடைந்தன. காளவாசல், ஆரப்பாளையம் பகுதிகளிலும் மறியல் போராட்டத்தால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மதுரை நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மறியலில்  ஈடுபட்ட 950 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம்: அதே போல் அவனியாபுரம்,  வில்லாபுரம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் விமான நிலையத்துக்கு போராட்டக்காரர்கள் வருவதாக வந்த தகவலையடுத்து அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அதிவேக அதிரடிப்படையினர், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஞானரவி தலைமையில் பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com