தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றியை  உறுதி செய்ய வேண்டும்: அமித்ஷா

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுவதை பாஜகவினர் உறுதி செய்ய வேண்டும்
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா-வுக்கு வரவேற்பு அளிக்கும் நிர்வாகிகள். 
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா-வுக்கு வரவேற்பு அளிக்கும் நிர்வாகிகள். 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுவதை பாஜகவினர் உறுதி செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுறுத்தினார்.
தமிழகத்தின் மேற்கு, மத்திய மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மதுரை அருகே வலையங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ்,  தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,  முன்னாள் எம்.பி.க்கள் இல. கணேசன்,  சி.பி. ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், மாநிலச் செயலர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி,  ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவினர்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமித்ஷா அறிவுரை வழங்கினார். தமிழகத்தில் 5 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட்டாலும்,  40 தொகுதிகளின் வெற்றிக்கும் பாஜகவினர் உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, கூட்டத்தில்  வானதி சீனிவாசன் பேசியது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிப்பது அவசியம்.
தற்போது  முகநூல், சுட்டுரை ஆகிய சமூக ஊடகங்களில் தான் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வை இருக்கிறது.  ஆகவே, அவற்றின் மூலம் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம்   கொண்டு செல்ல வேண்டும்.
 தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக வரும் 24-இல் தமிழகம் முழுவதும் மகளிரணி சார்பில் விளக்கேற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் அதிகம் பேர் அதில்  பங்கேற்க வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் 28-இல் அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் பிரதமர் காணொலியில் பேச உள்ளார் என்றார்.

5 தொகுதிகள் தானே என்று சோர்ந்து விடாதீர்: அமித்ஷா
பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.  அரங்கில் பாதுகாப்புக்கு இருந்த  காவல் துறையினர் மற்றும்  நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் வெளியேற்றப்பட்டனர். கூட்டத்தில் அமித்ஷா பேசியதாக பின்னர் கட்சி வட்டாரங்கள் கூறியது:
மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை பாஜக அமைத்திருக்கிறது.  5 தொகுதிகள் மட்டும்தான் நமக்கு கிடைத்திருக்கிறது என யாரும் சோர்ந்துவிட வேண்டாம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக உழைக்க வேண்டும்.  இன்னும் 5 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறும்.  அப்போது நமது கை ஓங்கியிருக்கும்;  நாம் நினைத்தது நடக்கும்.
 முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக்காட்டிலும் விலைவாசி தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என அமித்ஷா பேசியதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com