திமுகவுடனான மதிமுக, விசிக பேச்சுவார்த்தையில் இழுபறி

மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாட்டுக்காக திமுகவுடன் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள்
திமுகவுடனான மதிமுக, விசிக பேச்சுவார்த்தையில் இழுபறி

மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாட்டுக்காக திமுகவுடன் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளைத் திமுக ஒதுக்கியுள்ளது.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் வியாழக்கிழமை திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினருடன் கணேசமூர்த்தி தலைமையிலான மதிமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. மதிமுக சார்பில் 3 தொகுதிகள் கேட்கப்பட்டன. அதைத் திமுகவினர் குழுவினர் ஏற்கவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கணேசமூர்த்தி கூறியது:
திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவினரிடம் எங்களுக்குத் தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையைக் கேட்டோம். தலைமையோடு முடிவு செய்து கூறுவதாகத் தெரிவித்தனர். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். பிப்ரவரி 25-ஆம் தேதி மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதற்கும்,  திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்றார்.
விசிக பேச்சுவார்த்தை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையிலான குழுவினர் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் பகல் 12.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. விசிக சார்பில் 2 தொகுதிகளை நிச்சயம் ஒதுக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. ஆனால், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசும்போது, திமுகவுடனான பேச்சுவார்த்தை இணக்கமாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாக கூறினார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினரும் திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com