தேமுதிக தயங்குவது ஏன்?

தேமுதிக தயங்குவது ஏன்?

2016  சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், 2019 மக்களவைத் தேர்தலுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால்,

2016  சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், 2019 மக்களவைத் தேர்தலுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், திமுக - அதிமுக இரண்டு அணிகளுமே வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தேமுதிகவை கருதாமல் இருப்பதுதான். தேமுதிகவை தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆளும் அதிமுக கூட்டணி காட்டும் ஆர்வத்தைக்கூட திமுக கூட்டணி காட்டுகிறதா என்றால் இல்லை. பாமகவை எப்படியாவது தனது அணிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முனைப்புக் காட்டிய திமுக, தேமுதிகவை ஒரு பொருட்டாக சட்டை செய்யவில்லை. 
நடிகர் ரஜினிகாந்தைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்ததற்குப் பின்னால், அவரைக் கூட்டணிக்கு அழைக்கும் எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தேமுதிக, அதிமுக அணியுடன் சேர்வதாக இருந்தால், அந்தப் பேரத்துக்கு நாமும் சற்று வலுசேர்த்து வைப்போமே என்கிற அரசியல் ராஜதந்திரம்கூட காரணமாக இருக்கக்கூடும்.
 2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் மதுரையில் தேமுதிக தொடங்கப்பட்டபோது, அந்தக் கட்சியின் வருங்காலம் குறித்து எதிர்பார்க்கப்பட்ட மிகப்பெரிய எழுச்சியும், வளர்ச்சியும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஆனால், தேமுதிகவை அரசியல் களத்தில் ஒரு சக்தி அல்ல என்று யாரும் புறந்தள்ளிவிட முடியாது என்கிற உண்மையையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
2014 மக்களவைத் தேர்தலின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் காணப்பட்ட உற்சாகமும், சுறுசுறுப்பும் அவர் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து குறைந்துவிட்டது தேமுதிகவின் மிகப்பெரிய துரதிருஷ்டம். உடல் நலம் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிலை வகித்திருந்தாலும் வியப்படையத் தேவையில்லை. 
 ஆச்சரியம் என்னவென்றால், விஜயகாந்தின் உடல்நலக் குறைவுக்கும் 2016 சட்டப்பேரவைப் படுதோல்விக்குப் பிறகும்கூட, தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் வரை தேமுதிக தொண்டர்கள் இயங்கிவருகிறார்கள் என்பதுதான். 
 2005-இல் தேமுதிக தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும்  போட்டியிட்டு, அதன் தலைவர் விஜயகாந்த் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அந்தக் கட்சி 8.38 சதவீத வாக்குகளையும் பெற முடிந்தது. அதைத்தொடர்ந்து நடந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் தேமுதிக 31 லட்சம் வாக்குகளையும், 10.08 சதவீத வாக்கு விகிதத்தையும் பெற்றது. 2009-இல் துணிந்து 39 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தேமுதிக தயங்கவில்லை. 
 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் அமைத்துக்கொண்ட கூட்டணி அந்தக் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. ஆனால், அதிக நாள் அந்தக் கூட்டணி நீடிக்கவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம், தனது எம்ஜிஆர் வாக்கு வங்கியை விஜயகாந்தும் குறி வைப்பதை அதிமுகவின் அன்றைய தலைமை விரும்பவில்லை என்பதுதான். 
 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக அணியில் மிக முக்கியமான கட்சியாக தேமுதிக உருவெடுத்தது. அந்தக் கட்சிக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 20.78 சதவீத வாக்கு விகிதத்துடன் நான்கு இடங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், ஐந்து இடங்களில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், 10 இடங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் தேமுதிகவால் பெற முடிந்தது.
 திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைத்து பாஜகவும், பாமகவும் தலா ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற முடிந்த நிலையில், 14 இடங்களில் போட்டியிட்டும் தேமுதிகவால் ஓர் இடத்தைக் கூடப் பெற முடியவில்லை. வடதமிழகத்தின் குறிப்பிட்ட தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் பாமகவைப் போலவோ அல்லது தமிழகத்தின் ஒருசில தொகுதிகளில் மட்டும் தனக்கென்று கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் பாஜகவைப் போலவோ அல்லாமல் 234 தொகுதிகளிலும் வாக்குகளையும் கட்சி அமைப்பையும் கொண்டிருப்பது தேமுதிகவின் பலம். எந்தத் தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெற முடியாவிட்டாலும், தான் சார்ந்திருக்கும் அணிக்கு தனது வாக்குகளை வாங்கிக் கொடுக்கும் சக்தி இடதுசாரிக் கட்சிகளைப் போல தேமுதிகவுக்கு உண்டு. 
 திமுகவைப் பொருத்தவரை, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கு தேமுதிக வராமல், மூன்றாவது அணி அமைத்து தனது ஆட்சி அமைக்கும் வாய்ப்பைத் தகர்த்தது என்கிற ஆத்திரம் இன்னும் தணிந்தபாடில்லை என்றும், அதனால் அதிமுக கூட்டணியில் நாம் சேர்ந்துவிடுவதுதான் நல்லது என்றும் தேமுதிக தலைமையிடம் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்குத் தடையாக இருப்பது, அந்தக் கட்சியின் தன்மான உணர்வுதான் எண்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்டுவிட்டு இப்போது பாமகவைவிடக் குறைவாக இரண்டு அல்லது மூன்று இடங்களில் போட்டியிடுவது தனது பலவீனத்தைத் தானே வெளிச்சம்போடுவதாக அமையும் என்று தேமுதிக தலைமை கருதுவதாகத் தெரிகிறது. 
 2014 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பிரசார பலமாக இருந்த விஜயகாந்த் உடல் நலம் இல்லாமல் இருப்பதாலும், தேமுதிக தனது பழைய வாக்கு வங்கியைக் கணிசமாக இழந்திருப்பதாலும் அதிமுக அணியினர் தேமுதிகவுக்கு அதிக இடங்களை ஒதுக்கத் தயங்குகின்றனர். தமாகாவைப் போலவோ, புதிய தமிழகம் கட்சியைப் போலவோ எந்தவொரு குறிப்பிட்ட பகுதியிலும் தனக்கென்று கணிசமான வாக்குகள் இல்லாமல் இருப்பதுதான் தேமுதிகவின் பலவீனம். ஆனால், தேமுதிக இடம்பெறும் கூட்டணி போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும், தனது பங்குக்கு குறைந்தது 10,000 வாக்குகளையாவது அளிக்க முடியும் என்பதுதான் தேமுதிகவின் பலம். தமிழகத்திலுள்ள திமுக, அதிமுக தவிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட வேறு எந்தக் கட்சிக்கும் தேமுதிக போல, 234 தொகுதிகளிலும் தொண்டர் பலம் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 
 எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பதல்ல முக்கியம், எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம், எத்தனை இடங்களில் வெற்றி நிச்சயம் என்பது இலக்காக இருக்க வேண்டும் என்பது தேர்தல் கூட்டணிகள் அமையும்போது அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை இலக்கணம். தேமுதிகவுக்கும் இது பொருந்தும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com