அதிமுகவை பணிய வைத்தே பாஜக கூட்டணி அமைத்துள்ளது: முதல்வர் நாராயணசாமி

அ.தி.மு.க.வை பணிய வைத்துதான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது  என்றார் புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி.
அதிமுகவை பணிய வைத்தே பாஜக கூட்டணி அமைத்துள்ளது: முதல்வர் நாராயணசாமி

அ.தி.மு.க.வை பணிய வைத்துதான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது  என்றார் புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவர் அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தலில் அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளன. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியே சென்றுவிட்டன. பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் முக்கிய கோரிக்கை வங்கிக் கடனை ரத்து செய்யவேண்டும் என்பதுதான்.

புதுச்சேரியில் நாங்கள் விவசாயக் கடனை ரத்து செய்திருக்கிறோம். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கிறோம். தமிழக மக்களுக்கு துரோகம் செய்த கட்சி பாஜக, அதிமுக வை பணிய வைத்து கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக ஊழல் மிகுந்த கட்சி என்று கடந்த 2 மாதங்களுக்கு  முன்பு பாமக  நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஆனால், தற்போது, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். எனவே, வரும் தேர்தலில்

அந்தக் கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். இங்கிலாந்து  நாட்டைச் சேர்ந்த ரிச்சர்டு என்ற அமைப்பு வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் என்றும் முடிவுகள் வெளியானது. வரும் தேர்தலில் கட்டாயமாக  மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். ராகுல் காந்தி பிரதமர் ஆவார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியுடன் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என 2011-இல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். இப்பொழுது ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறும் அதிமுக  தலைவர்கள்  ரங்கசாமியின் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மாநில அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகிறார். நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார். இதைக் கண்டித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் பலனில்லாத காரணத்தால், நானும், அமைச்சர்களும் ஆளுநர் மாளிகை அருகே

அமைதியான முறையில் தர்ணாவில் ஈடுபட்டோம். அதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றார் அவர்.

இதில், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, புதுச்சேரி மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அமீர் கான், தூத்துக்குடி மாவட்ட விவசாய அணி தலைவர் வேல்ராமகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவர் செண்பகராமன், மாவட்டச் செயலர்கள் லோகிநாதன், ஐந்துகோடி அரிகரன், ஆகியோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com