கஜா புயல்: நூறு நாட்களைக் கடந்த பிறகும் மீளாமல் தவிக்கும் விவசாயிகள், மீனவர்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நூறு நாள்களைக் கடந்த பிறகும் கூட  சகஜநிலைக்குத்திரும்ப முடியாமல் விவசாயிகளும், மீனவர்களும் தவித்து வருகின்றனர்.
கஜா புயல்: நூறு நாட்களைக் கடந்த பிறகும் மீளாமல் தவிக்கும் விவசாயிகள், மீனவர்கள்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நூறு நாள்களைக் கடந்த பிறகும் கூட சகஜநிலைக்குத்திரும்ப முடியாமல் விவசாயிகளும், மீனவர்களும் தவித்து வருகின்றனர்.

2018, நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலையில் கஜா புயல் வீசியது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்கள் பேரழிவைச் சந்தித்தன. இதில், ஏறத்தாழ 87,000 கூரை வீடுகளும், சுமார் 54,000 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன. ஏறத்தாழ 45 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தும், பாதியாக முறிந்தும் விழுந்தன. புயலால் மக்கள் வீடுகளை இழந்தது மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, தென்னை விவசாயிகளின் வாழ்க்கை 20 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது. 

இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கு  சுமார் 5 முதல் 8 ஆண்டுகள் பிடிக்கும்.இந்நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் ரூ. 541.49 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 52,668 தென்னை விவசாயிகளுக்கு ரூ. 374.23 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. எனினும், ஏராளமான விவசாயிகளுக்கு   நிவாரணம் கிடைக்காத  நிலையே உள்ளது.  கஜா புயல் பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலையில் தென்னை விவசாயிகள் உள்ளனர். புயல் தாக்கிய நாளில் இருந்து,  சனிக்கிழமை (பிப்.23)

வரை 100 நாட்களைக் கடந்த பிறகும்.  50 சதவீதத்துக்கும் அதிகமான தோப்புகளில் முறிந்து விழுந்த தென்னை மரங்கள் அகற்றப்படாத நிலையே தொடர்கிறது.  இதற்கு, அதிக அளவில் சிறு, குறு விவசாயிகள் மரங்களை அப்புறப்படுத்துவதற்கு பொருளாதார வசதி இல்லாததே காரணம். நிவாரணம் கிடைத்த விவசாயிகளுக்கும் அத்தொகை பாதிப்பை ஈடுகட்டுமா என்பது சந்தேகம்தான்.ஒரு சிலருக்கு லட்சக்கணக்கில் நிவாரணம் கிடைத்திருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு ஆயிரக்கணக்கில்தான் கிடைத்துள்ளது.  உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய செலவுக்குக்கூட இத்தொகை  போதுமானதாக இல்லாததால், மரங்களை அகற்றுவதற்குச் செலவிட முடியவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் தெரிவித்தது:

சேலம்,  தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மர வியாபாரிகள் டிசம்பர் மாதத்தில் வந்தனர். அவர்களும் நெடுஞ்சாலையோரம் உள்ள தோப்புகளில் மட்டும் முதிர்ந்த மரங்களை மட்டும் அள்ளிச் சென்றனர். அதன் பிறகு வரவில்லை. நிவாரணம் சிலருக்கு லட்சக்கணக்கில் கிடைத்தது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு ரூ. 30,000 முதல் 40,000 வரைதான் கிடைத்தது. பாதிக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இத்தொகை மிகவும் குறைவாக இருக்கிறது.மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றுவதற்கு மணிக்கு ரூ. 1,000 வீதம் செலவாகிறது. ஆனால், ஒரு மரத்தை அகற்றுவதற்கே குறைந்தது ஒரு மணிநேரமாகிறது. அந்த அளவுக்குச் செலவு செய்வதற்கு நிதி ஆதாரமில்லை. அரசு வழங்கும் மரம் அறுவை இயந்திரமும், தூளாக்கும் இயந்திரமும் பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. ஏழ்மையின் காரணமாக மரங்களை அகற்ற முடியவில்லை என்றனர் விவசாயிகள்.இதனால், இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான மறு சீரமைப்புப் பணியில் ஈடுபட முடியாமல் பெரும்பாலான விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

விசைப் படகு மீனவர்களுக்கு தொடரும் சோகம்:

இதேபோல, பெரும்பாலான மீனவர்களும் படகுகளைச் சீரமைக்க முடியாமல் தவிக்கின்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் கூட படகுகளை ஓரளவுக்குச் சீர் செய்து, கடலில் மீன் பிடித்து வருகின்றனர். ஆனால், விசைப் படகுகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால்,   அவற்றைப் பழுது பார்க்க முடியாத நிலையில் மீனவர்கள் உள்ளனர். கஜா புயல் பாதிப்பால் 188 படகுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதால், மூன்று மாதங்களாக ஏறத்தாழ 15,000 மீனவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலர் அ. தாஜூதீன் தெரிவித்தது:

சேதமடைந்த விசைப் படகுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால், இத்தொகையை வைத்து எதையுமே செய்ய முடியாது. பழைய விதிப்படி இத்தொகையை அரசு வழங்க முன் வருகிறது. இதை வைத்து படகை வாங்க முடியாது. எனவே, ரூ. 10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கினால், இந்த இழப்பிலிருந்து ஓரளவுக்கு மீள முடியும். ஆனால், இதை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காததால், செய்வதறியாது,கையறு நிலையில் தவித்து  வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com