திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.  மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களுக்கான கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.  விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என ஒசூரில்
ஒசூர் அருகே தொரப்பள்ளி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பேசுகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஒசூர் அருகே தொரப்பள்ளி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பேசுகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.  மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களுக்கான கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.  விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என ஒசூரில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மூதறிஞர் ராஜாஜி பிறந்த தொரப்பள்ளி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியது.
மோடி ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம் வந்து விட்டது.  மக்களவைத் தேர்தலுடன், 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வேண்டும்.  தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு ஒரே செலவில் முடியும். ஆனால்,  இடைத் தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.  தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.  தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன்,  உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.
முதியோர் உதவித்தொகை பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது.  தி.மு.க. ஆட்சியில் கொடுத்த முதியோர் உதவித்தொகையை 50 சதவீதமாகக் குறைத்துவிட்டனர்.  தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்,  கட்சி பாகுபாடின்றி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.  கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால்,  கல்விக்கடனைத் தள்ளுபடி செய்வோம்.  விவசாயக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். ஆனால்,  தற்போதைய பிரதமர் மோடியின் ஆட்சி கல்விக்கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. தமிழக முதல்வர் பழனிசாமியும் வலியுறுத்தவில்லை.  மக்களவைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம்  வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். 
 கருப்புப் பணத்தை மீட்டு,  இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரூ. 15 லட்சம் வங்கிக்கணக்கில் வழங்கப்படும் என மோடி கூறினார். 15 பைசா கூட வழங்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம்.  மதுரை வந்த பா.ஜ., தலைவர் அமித்ஷா பா.ஜ. க.வுக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி கட்சித் தலைவர்களை கேலி செய்துள்ளார்.   
இந்தியாவில் நிரந்தரமாக பிரதமரே இல்லை. வெளிநாட்டில் தான் மோடி சுற்றிக் கொண்டுள்ளார்.  முதலில் நாட்டைக் காப்பாற்றுவோம்.  தி.மு.க. வெற்றி பெற ஆதரவு தர வேண்டும் என்றார்.
ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். 
இந்தக் கூட்டம் முடிந்ததும் ராஜாஜி வாழ்ந்த வீட்டுக்குச் சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, அங்குள்ள புகைப்படங்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.  முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,  தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ்,  வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. பி.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com