சுடச்சுட

  

  போர்க்குற்ற விசாரணை நடத்த இலங்கை மறுப்பு: என்ன செய்யப் போகிறது இந்தியா?  

  By DIN  |   Published on : 26th February 2019 06:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  FormerSriLankanPresidentMahindaRajapaksa

   

  சென்னை: போர்க்குற்ற விசாரணை நடத்த இலங்கை மறுப்பு தெரிவித்துளாள் நிலையில் இந்தியா என்ன செய்யப் போகிறது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  இலங்கை இறுதிப் போரில் சிங்களப் படைகள் நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியிருக்கிறார். இலங்கை இறுதிப்போரின்  போது ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் படைகளையும், இலங்கை  அரசியல் தலைவர்களையும் காப்பாற்றும் நோக்கம் கொண்ட இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.

  இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த தமிழினத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்களை படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களும் தொடர்ந்து மேற்கொண்ட முன்னெடுப்புகளின் பயனாக இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு 2014 - ஆம் ஆண்டில் ஆணையிடப்பட்டது. ஐ.நா மனித உரிமை ஆணையர் தலைமையிலான விசாரணையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

  அதைத் தொடர்ந்து இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி  2015-ஆம் ஆண்டு  ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நான்கு ஆண்டுகளாகியும், போர்க்குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை.

  ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் போர்க்குற்றங்கள்   குறித்து இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதையே காரணம் காட்டி, இலங்கை முன்னாள் அதிபர்  இராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இலங்கை தாமதித்து வந்தது. இந்தநிலையில் தான், இலங்கையை இனியும்  தப்பவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் இலங்கைப் போர்க்குற்றம் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு காலவரையறை நிர்ணயிக்கக் கோரும் தீர்மானத்தை ஜெனிவாவில் நேற்று தொடங்கிய ஐநா மனித உரிமைப் பேரவையின் 40-ஆவதுக் கூட்டத்தில் கொண்டு வர இங்கிலாந்து, கனடா, மாசடோனியா, ஜெர்மனி, மாண்டநெக்ரோ ஆகிய ஐந்து நாடுகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன. அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்த நாடுகளால் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

  இத்தகையத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டால், போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்ற முடியாது  என்பதால் தான், போர்க்குற்றங்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த முடியாது என்று சிறிசேனா கூறியுள்ளார். ‘‘ இலங்கைப் போரில் சிங்களப்படைகள் எந்த போர்க்குற்றமும் செய்யவில்லை. இதுகுறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரும் ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து வெளியேற இலங்கை முடிவு செய்துள்ளது’’ என்று சிறிசேனா கூறியுள்ளார்.

  இலங்கையின் இந்த செயலை மன்னிக்க முடியாது. இலங்கைப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவோம் என்று பன்னாட்டு சமுதாயத்திடம் வாக்குறுதி அளித்திருந்த இலங்கை, இப்போது தப்பிக்கத் துடிப்பது சரியல்ல. இது கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் தான். இலங்கையின் இந்த செயலை அனுமதித்தால் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்களை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தண்டிக்க முடியாது; கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியும் வழங்க முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. அதை மத்திய அரசு உணர வேண்டும்.

  இலங்கை அரசின் இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்றால், இலங்கைக்கு எதிரான மனித உரிமைப் பேரவையில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போர்க்குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், அதன் பிற செயல்பாடுகளையும் கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் -இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும்  என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai