
தமிழக அரசின் உதவித்தொகை ரூ.30 லட்சம் கேட்டு, அரசு முத்திரையை தவறாகப் பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு போலி கடிதம் அனுப்பிய திருவட்டாறு நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம், திருவட்டாறு அருகேயுள்ள கொல்வேல் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (59). இவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அரசு முத்திரையுடன் கூடிய ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னையின் போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அரசு தனக்கு ரூ. 30 லட்சம் உதவி வழங்குவதாக அறிவித்திருந்ததாகவும், அது தொடர்பான தகவலை எரிசக்தி துறையினர் கடிதம் மூலம் தெரிவித்ததாகவும், எனவே அந்த ரூ. 30 லட்சத்தை தனக்கு வழங்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் தொடர்பாக சந்தேகம் அடைந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து, திருவட்டாறு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் குறித்து நடராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், அரசை ஏமாற்றும் வகையில் கடிதம் அனுப்பியதும், அரசு முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை வைத்திருப்பதும், அரசு முத்திரைகளைத் தயாரித்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.