
நுண்துளை மூலம் இதய வால்வு பொருத்தும் அதிநவீன சிகிச்சை நாட்டிலேயே தமிழக அரசு மருத்துவமனைகளில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இதய ரத்த வால்வுகளின் செயல்பாடு குறையும்போது அதற்கு மாற்றாக செயற்கை வால்வுகள் பொருத்தப்படுவதுண்டு. அறுவை சிகிச்சைகள் மூலமாகவே இன்றளவும் வால்வுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அறுவை சிகிச்சைக்கு உடல் நிலை ஒத்துழைக்காதவர்களுக்கு செயற்கை வால்வு பொருத்துவதில் பெரும் சவால் இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் அதற்கு மாற்றாக டிஏவிஐ (டிரான்ஸ் அயோர்ட்டிக் வால்வு இம்ப்ளான்டேஷன்) எனப்படும் நுண்துளை சிகிச்சையானது அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது, தொடை வழியே சிறிய துளையிட்டு, நரம்பு வழியாக இருதயத்தில் வால்வை பொருத்தும் சிகிச்சை முறையாகும். ஏறத்தாழ ஆஞ்சியோவை ஒத்த சிகிச்சை இது.
இந்நிலையில், விருதுநகர், கரூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த இருவர் இதய வால்வு பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் இருவரது உடல் நிலையும் அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை. இதையடுத்து, பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் கோபாலமுருகன், டாக்டர் பிரசாந்த் வைத்தியநாதன் ஆகியோரது ஹார்ட் டீம் இந்தியா அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அவர்கள் இருவர் தலைமையில் ஓமந்தூரார் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் கார்த்திகேயன், பார்த்தசாரதி ஆகியோர் அடங்கிய குழு, கடந்த நவம்பர் மாதம் இரு நோயாளிகளுக்கும் டிஏவிஐ முறை மூலம் இதய வால்வுகளை பொருத்தியது. தனியார் மருத்துவமனைகளில் அந்த சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் செலவாகும் எனக் கூறப்படுகிறது முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அது இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவர்களை பாராட்டும் நிகழ்வு ஓமந்தூரார் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களை கெளரவித்தார். நாட்டிலேயே தமிழகத்தில்தான் தனியாருக்கு நிகரான அதி நவீன மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அவர் அப்போது தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் உமாநாத், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு, தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.