
கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு, 25-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, மகா சிவராத்திரி தினத்தன்று மாலை ஈஷா யோகா மையத்துக்கு வரும் அவர் சத்குருவுடன் தியானலிங்கத்தில் நடைபெறும் சக்திவாய்ந்த பஞ்ச பூத ஆராதனையில் கலந்துகொள்கிறார்.
மேலும், லிங்க பைரவி, சூர்ய குண்டம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு மகா சிவராத்திரி விழா நடக்கும் இடத்திற்கு வருகை தருவார். அங்கு சத்குரு அவர்களுடன் இணைந்து புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களின் நினைவாக மரக் கன்றுகளை நட உள்ளார்.