
காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற தலைப்பிலான அரசியல் எழுச்சி மாநாடு கொடிசியா அருகேயுள்ள மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநிலத் துணைச் செயலர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வரவேற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி அவற்றை அழித்ததற்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை ஆயுதங்களின் மூலம் தீர்வு காண்பதாக அமைந்துவிடக் கூடாது. அதற்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காண்பதுதான் நீடித்த அமைதிக்கும், தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கும் பொருத்தமான வழிமுறையாக அமையும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில துணைச் செயலர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலர் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.