
திருப்பூர் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தைச் சேர்ந்தவர் தனபால் (28), தொழிலாளி. இவர் ஏற்கெனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு மீண்டும் இரு பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் மனைவியின் முதல் கணவர் மூலம் பிறந்த மகளான 11 வயது சிறுமி மூலனூரில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை தனபால் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் தனபாலைக் கைது செய்த காவல் துறையினர் அவர் மீது போக்úஸா (குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார். இதில், தனபாலின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போக்úஸா சட்டத்தில் 21 ஆண்டுகளும், கொலை மிரட்டலுக்கு 5 ஆண்டுகளும் என 26 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பரிமளா ஆஜரானார்.