
சூலூர் விமானப் படைத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 4ஆம் தேதி (திங்கள்கிழமை) கோவைக்கு வருகைதர உள்ளார்.
இது குறித்து இந்திய விமானப் படையின் தென் மண்டல ஏர் கமாண்டர் ஏர் மார்ஷல் பி.சுரேஷ் சூலூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சிறப்பாகப் பணியாற்றி வரும் பாதுகாப்புப் படைகளுக்கு முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவரின் தனித்த கொடி அங்கீகாரம் வழங்கி கெளரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, சிறப்பான பழுதுபார்க்கும் சேவைக்காக, கோவை மாவட்டம், சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள 5ஆவது பழுதுபார்க்கும் பிரிவுக்கும், விமானிகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதற்காக தெலங்கானாவில் உள்ள ஹக்கிம்பேட்டை விமானப் படைப் பிரிவுக்கும் கொடி அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான நிகழ்ச்சி சூலூர் விமானப் படைத் தளத்தில் மார்ச் 4ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சம்பந்தப்பட்ட படைப் பிரிவினருக்குக் கொடிகளை வழங்க உள்ளார். விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், விமானப் படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், ஓய்வுபெற்ற வீரர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, இலகு ரக போர் விமானமான தேஜஸின் சாகசம், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வீரர்கள் பாராசூட் மூலம் குதிக்கும் சாகச நிகழ்ச்சி போன்றவை நடைபெறுகின்றன.
சூலூர் 5ஆவது பழுதுபார்க்கும் படைப் பிரிவுத் தலைவர் அதுல் கர்க், ஹக்கிம்பேட்டை விமானப் படை விமான நிலையத் தலைவர் ஆர்.கே.ஓபராய், சூலூர் 43ஆவது படைப் பிரிவின் தலைவர் ஏ.கே.புந்தம்பேகர் ஆகியோர் உடனிருந்தனர்.