
கோப்புப்படம்
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் நல்லது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
கோவை, காந்திபுரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. கருத்து, கொள்கை அடிப்படையில் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் இணைந்து கலப்படக் கூட்டணி அமைத்துள்ளன. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திமுகவுடன் நாங்கள் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களுடன் ஒன்றாக இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஓரிரு நாள்களில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் நல்லது. தொகுதி பங்கீடு தாமதமாவதற்கு தேமுதிகவின் வருகைகூட காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடிக்க தமிழக அரசு உடனடியாகத் தனிப்படை அமைப்பது அவசியம்.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பாராட்டுக்குரியது. இத்தாக்குதல் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. தேசப் பாதுகாப்பில் பாஜகவுக்கு அக்கறை இருந்திருந்தால், இதற்கு முன்னர் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதல், வடமாநில பிரச்னைகள் உள்ளிட்டவற்றை மூடி மறைக்க, ராணுவத்தினர் தற்போது நடத்தியுள்ள தாக்குதலை பாஜக பயன்படுத்தப் பார்க்கிறது. தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்வதற்கு பாஜக தயங்காது.
தேர்தல் நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இந்தியாவும், தன் மக்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றார்.