
மக்களவைத் தேர்தலில் திருச்சியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிவு செய்யும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சமூக ஆர்வலர் முகிலன் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால், இப்பிரச்னையை அரசு மெத்தனமாகக் கையாளுகிறது. அவரது குடும்பத்தினர் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடி அக்கறை செலுத்த வேண்டும்.
கன்னியாகுமரிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம். திருப்பூரில் அவருக்கு கருப்புக் கொடி காட்டியபோது, பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் என்னை நோக்கி செருப்பை வீசினார். ஆனால், அவரை நாங்கள் கூட்டத்தில் இருந்து பத்திரமாக மீட்டு அனுப்பினோம்.
மேக்கேதாட்டு அணை, நியூட்ரினோ திட்டம், முல்லைப் பெரியாறு அணை என அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. திமுகவுடன் நடத்தப்பட்டு வரும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது. நான் திருச்சியில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிவு செய்யும் என்றார்.