
மதுரை - சென்னை இடையே விரைவில் பயணத்தை தொடங்க உள்ள தேஜஸ் அதிவிரைவு ரயிலை, மதுரை ரயில் நிலையத்தில் அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் என்ற அதிவிரைவு ரயில், வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், பிற்பகல் 1 மணிக்கு மதுரையை அடையும். அதேபோல மறுமார்க்கத்தில் மதுரையில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.35 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை அடையும்.
இந்த ரயில், விழுப்புரம், திருச்சி ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த ரயிலின் இயக்கத்தையும் தொடங்கி வைக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தற்போது மதுரை ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேஜஸ் ரயிலை, ஊழியர்கள் அலங்கரிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.