
பாம்பன் பாலத்தை புதன்கிழமை கடந்து சென்ற பயணிகள் ரயில்.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து சுமார் 84 நாள்களுக்கு பிறகு பயணிகள் ரயில் போக்குவரத்து புதன்கிழமை தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் வரை இயக்கப்பட்டு வந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் வழக்கம் போல பாலத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதையடுத்து புதன்கிழமை அதிகாலை வாராணசி ரயில் பாம்பன் பாலத்தை 10 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து ராமேசுவரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர் மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வந்த ரயில்கள் பாம்பன் பாலத்தை கடந்து ராமேசுவரம் வந்தடைந்தது. இதனால் ரயில் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புப் பணிகளை தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியரா புதன்கிழமை ஆய்வு செய்தார்.