
சென்னை, பிப். 27: காஷ்மீர் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களின் மனைவிக்கு அரசுப் பணிக்கான உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை அளித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர்.
இதில், உயிரிழந்த 40 வீரர்களில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தின் ஜி.சுப்ரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, உயிரிழந்த ஜி.சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, சிவசந்திரன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலைக்குரிய பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். இரண்டு பேருக்கும் வருவாய்த் துறையில் பணிஅளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.