சுற்றுலாப் பயணிகளைக் கவர பாபநாசத்தில் மீன் காட்சியகம், பூங்கா!: வனத் துறை சிறப்பு நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், முண்டந்துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இந்த வனப்
கருத்தைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மீன் தொட்டிகள்.
கருத்தைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மீன் தொட்டிகள்.


திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், முண்டந்துறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இந்த வனப் பகுதிகளின் சிறப்பு குறித்து அறியும் வகையிலும், வனத் துறை சார்பில் மீன் காட்சியகம், பூங்கா உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இம்மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் பாபநாசம், முண்டந்துறை, காரையாறுதான். மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரவருணியை அடிப்படையாகக் கொண்டு பரந்து விரிந்த வனப் பகுதியும், குளுமையான சூழ்நிலையும், அகஸ்தியர் அருவியும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. பொதிகை சிகரம் அமைந்துள்ள இந்த வனப் பகுதி உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இப்பகுதியை ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவனம் உலக பல்லுயிர்ப் பெருக்கக் கோளம் என்றும், உலகப் பாரம்பரிய இடமாகவும் அறிவித்துள்ளது.
உலகில் மிகவும் அரிதான மூலிகைகள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் இங்கு உள்ளன. இந்த வனப் பகுதி உலகெங்கும் உள்ள பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் மிகுந்த வளம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளதால், இதைப் போற்றிப் பாதுகாக்க ஐ.நா. சபை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள், அமைப்புகளின் உதவியுடன் தமிழக வனத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வனப் பகுதிக்கு சுற்றுலா வருவோருக்கு அதன் சிறப்பு, பெருமை தெரியாதது வியப்புக்குரியது. பொதிகை மலை, அகத்திய மலை உள்ளிட்டவை பற்றி மட்டும் புராண அடிப்படையில் தெரிந்திருப்போர், அதன் உள்ளடக்கம் குறித்து அறிந்திருக்கவில்லை. இதனால் சுற்றுலா வருவோரின் நடவடிக்கை வனத்தையும், வன விலங்குகளையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில், முண்டந்துறை வனப் பகுதியை சூழல்கல்விக்கூடமாக அறிவித்து, இங்கு வருவோர் வனம், பல்லுயிர்கள் குறித்து அறியும் வகையில் தமிழக வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பாபநாசம் வனச் சோதனைச் சாவடியின் மேற்குப் புறத்தில் உள்ள வனத் துறை விளக்க மையத்தில் அரிய வகை மீன் காட்சியகம், அதைச் சுற்றி காணியின பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்து விளக்கும் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. 
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் கொம்மு ஓம்கார் கூறியது: பொதிகை மலையின் சிறப்பை உலகம் அறிந்துள்ள நிலையில், நமது மக்கள் தெரிந்துகொள்ளாதது வருத்தமளிப்பதாக உள்ளது. சுற்றுலா வருவோர் மகிழ்ச்சியை மட்டும் கருதுகின்றனர்; வனத்தைப் பாதுகாக்க மறந்துவிடுகின்றனர்.
எனவே, சுற்றுலாப் பயணிகளிடம் நமது வன வளம், அதன் சிறப்புகளை எடுத்துக்கூறும் வகையிலும், பொழுதுபோக்கைப் பயனுள்ளதாக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அவற்றில் முதலாவதாக, கயல் திட்டம் என்னும் அரிய வகை மீன் காட்சியகம் அமைக்கப்படுகிறது. தாமிரவருணியில் மட்டும் காணப்படும் மீன் இனங்கள், தாமிரவருணியிலும் கண்ணிகட்டி பகுதியில் மட்டுமே காணப்படும் மீன் இனங்கள் ஆகியவற்றுடன், பிரேசில், சீனா, அமேசான் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரிய வகை மீன்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. மீன் தொட்டிகளில் நீர்த் தாவரங்கள், நீருக்கடியில் காணப்படும் பாறை, மண் வகைகள் பயன்படுத்தப்படவுள்ளன. 
ராஜநாகம் உலகின் பல பகுதிகளில் இருந்தாலும் இங்குள்ள வனப் பகுதியில்தான் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், பலவகை பாம்புகளும் உள்ளன. எனவே, மீன் காட்சியகத்தைச் சுற்றி பாம்பு வகைகளை விளக்கும் சிற்பங்கள், இப்பகுதியில் காணப்படும் ஆமை, தவளை போன்றவற்றின் சிற்பங்களைக் கொண்ட பூங்காவும் அமைக்கப்படுகிறது. 
இப்பகுதியின் பூர்வகுடிகளாகிய காணியின மக்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் அவர்களது குடியிருப்புகளின் மாதிரி அமைக்கப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய, பயன்படுத்தும் பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 
இதன்மூலம் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த வனத்தின் வளம், சிறப்பு குறித்து அறிந்துகொள்வதுடன், வனப் பகுதியைப் பாதுகாப்பதிலும் பங்கேற்கவேண்டும். விரைவில் மீன் காட்சியகம் திறப்பு விழா நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com