
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக பேரவைத் தலைவர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து பேசினார்.
இந்தத் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசினர். பேரவைத் தலைவர் தனபாலும் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசி அவையை ஒத்திவைத்தார்.
பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் தனபால் ஆகியோரின் அறைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று சந்தித்து நன்றி கூறினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
வாழ்ந்த காலத்தில் பாதி காலம் கருணாநிதி சட்டப்பேரவையிலேயே உலா வந்துள்ளார். அதில், மூன்றில் ஒரு பங்கு காலம் முதல்வராக இருந்துள்ளார். அவருடைய காந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருந்த பேரவையில், நினைவுகளாய் நீக்கமற நிறைந்துள்ளார். அவரின் மறைவையொட்டி இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அவர் பெருமையைப் போற்றிப் பேசிய முதல்வர், துணை முதல்வர், பேரவைத் தலைவர் உள்ளிட்ட தலைவர்களுக்கு திமுக தலைவர் என்ற முறையிலும் கருணாநிதியின் மகன் என்ற தனிப்பட்ட முறையிலும் தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதியின் மறைவையொட்டி , பல்துறைச் சான்றோர்கள் பங்கேற்ற புகழ் வணக்க நிகழ்வுகள் நாடெங்கும் நடந்தன. அந்த வரிசையில் பேரவையில் நிறைவேறிய இரங்கல் தீர்மான நிகழ்வு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக கொறடா அர.சக்கரபாணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோரும் மு.க.ஸ்டாலினுடன் சென்றனர்.