
வீராணம் ஏரி தண்ணீர் கிடைத்து வருவதாலும், மாற்று ஏற்பாடாக சிக்கராயபுரம் கல்குவாரி குடிநீர் இருப்பதாலும் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை மார்ச் மாத இறுதி வரை சமாளிக்க முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருநகரங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள சென்னை மாநகரம் 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பிழைப்புக்காக சென்னைக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய மக்கள் தொகை ஒன்றரை கோடியைத் தாண்டுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான குடிநீர் வழங்குவதில் சென்னை குடிநீர் வாரியம் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை குடிநீர், வர்த்தகம், தொழில் உற்பத்தி என பொதுமக்களுக்கு தினமும் சராசரியாக 83 கோடிலிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னைக்கான குடிநீர் ஆதாரங்களில் அந்த அளவுக்கு தண்ணீர் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக 65 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவு ஏரிகளின் நீர் இருப்பை பொறுத்து மாறுபடும்.
இந்தநிலையில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு உயரவில்லை. அவற்றில் தற்போது 1.3 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் சென்னை மக்களுக்கு அடுத்து வரும் வாரங்களுக்குப் போதுமான குடிநீர் கிடைக்காது; மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாயக் கிணறுகளிலும் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததால் அங்கிருந்தும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு மேலும் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதனால் மாற்று ஏற்பாடுகளை குடிநீர் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கல்குவாரிகளில் 1.5 டிஎம்சி குடிநீர்: இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னை மக்களின் ஒட்டுமொத்த குடிநீர்த் தேவைக்கு தற்போது புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து தினமும் 27 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. அதேபோன்று கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலமாக சென்னைக்கு 18 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. இது தவிர நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து தலா 10 கோடி லிட்டர் என மொத்தம் 20 கோடி லிட்டர் கிடைத்து வருகிறது. இதனால் பிப்ரவரி முதல் வாரம் வரை தற்போதைய குடிநீர் விநியோகம் (65 கோடி லிட்டர்) தொடரும்.
அதற்குப் பிறகு ஏரிகளில் நீர் இருப்புக் குறைந்தால் மாற்று ஏற்பாடாக காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரத்தில் உள்ள 22 குவாரிகளிலும் 1.5 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை சுத்திகரித்துப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதைக் கொண்டு 40 நாள்களை வரை சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
மேலும் போரூர் ஏரியிலும் தினமும் 40 லட்சம் லிட்டர் அளவுக்கு குடிநீரை எடுக்கலாம். ஒட்டுமொத்தமாக மார்ச் இறுதி வரை சென்னை மக்களுக்கான குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும். அதற்கு பிறகான தேவைகளுக்கு அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொள்வோம். எனவே சென்னையில் அடுத்த சில நாள்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.