
ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கக் கோரிய வழக்கில், சுகாதாரத் துறைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு:
கடந்த டிச. 26ஆம் தேதி ஹெச்ஐவி தொற்று கொண்ட ரத்தம், கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தில் சிவகாசி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் முறையாக பரிசோதிக்கப்படாததே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 8 லட்சம் நபர்களால், தானமாக அளிக்கப்படும் ரத்தம், ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்து கொள்வோர், வயதானவர்கள் என சுமார் 12 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு தானமாக பெறப்படும் ரத்தத்தில் ஹெச்ஐவி, மஞ்சள் காமாலை, மலேரியா, சிபிலிஸ் ஆகிய நோய்த் தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட வேண்டும்.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் முறையாக பரிசோதிக்கப்பட்டு ரத்தம் தானமாக பெறப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த பணியிடம் காலியாகவே உள்ளது.
எனவே, பாதுகாப்பான முறையில் ரத்த மாற்று செய்வதற்கான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிடுவதுடன், ஹெச்ஐவி தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சையும், உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிடவேண்டும். மக்களின் நலன் கருதி, தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பானதாக பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு, இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜன. 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.