
மக்களவையில் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள்.
மக்களவையில் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்ட 7 அதிமுக எம்பிக்கள் உள்பட 21 பேரை 4 நாள்களுக்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வியாழக்கிழமை உத்தரவிட்டார். கடந்த இரு நாளில் 45 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எழுப்பி மக்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை ஐந்து நாள்களுக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தவிட்டிருந்தார்.
இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை தொடங்கியதும் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ஏழு பேரும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதியை வழங்கக் கோரி தெலுங்கு தேசம் உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். சிலர் கிழிக்கப்பட்ட காகிதத் துண்டுகளை உயரே வீசினர். அவையின் மையப் பகுதியில் இரு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடிய போதும் உறுப்பினர்கள் சிலர் காகிதத் துண்டுகளை மக்களவைச் செயலக அதிகாரிகள் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள மேஜை மீது பறக்க விட்டனர். உறுப்பினர்களை அவரவர் இருக்கைகளுக்குச் செல்லுமாறு சுமித்ரா மகாஜன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார். எனினும், அமளி தொடர்ந்தது.
இதையடுத்து, அவையின் மையப் பகுதியில்அமளியில் ஈடுபட்டது அல்லது அவையின் விதிகளை மதிக்காமல் குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டது ஆகியவற்றுக்காக மக்களவை விதி எண் 374 (ஏ) -இன் கீழ் அதிமுக உறுப்பினர்கள் அருண்மொழித் தேவன், ஆர். கோபாலகிருஷ்ணன், சி.கோபாலகிருஷ்ணன், மருதராஜா, பன்னீர்செல்வம், நட்டர்ஜி, செந்தில்நாதன், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் 13 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா புட்டா ஆகியோரை அவை நடவடிக்கையில் தொடர்ந்து நான்கு நாள்கள் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்வதாக சுமித்ரா மகாஜன் அறிவித்து, அவையை 2 மணிவரை ஒத்திவைத்தார்.
ஆனால், அதிமுக, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் அதிமுகவுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர். இதுவரை 31 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால், செங்குட்டுவன், டாக்டர் கோபால், விஜயகுமார், ராமச்சந்திரன் ஆகியோர் மட்டுமே அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும்.
இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை அவையில் இருந்து இடைநீக்கம் செய்யும் நடவடிக்கை வழக்கத்திற்கு மாறானதாகும். கடந்த 2014, பிப்ரவரியில் அப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார் மூலம் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் இடைநீக்க நடவடிக்கைக்கு உள்ளாகினர்.
மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு:
மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியதும், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் எழுந்து, மக்களவையில் 24 அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயகமற்ற நடவடிக்கையாகும் என்றார். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவையில் நடந்ததை இங்கே நீங்கள் குறிப்பிட முடியாது. இது விதிகளுக்கு எதிரானதாகும் என்றார்.
வெளிநடப்பு: இதைத் தொடர்ந்து, நவநீதகிருஷ்ணன் பேசுகையில், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காவிரி டெல்டா பகுதி மக்கள் துயரத்தில் உள்ளனர். இதனால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி அவையில் இருந்து அவரும், அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், ஸ்டாஃப் செலக்ஸன் கமிஷன் (எஸ்எஸ்சி) அதன் தேர்வுகளை அனைத்து பிராந்திய மொழிகளிலும், மண்டல அளவிலும் நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, கனிமொழி மகளிர் மசோதா விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தாம் நோட்டீஸ் அளித்திருப்பதாகவும், அதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.