இந்துத்வா அமைப்புகளின் அராஜகத்தை அரசியல் ரீதியாக முறியடிப்போம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை 

இந்துத்வா அமைப்புகளின் அராஜகத்தை அரசியல் ரீதியாக முறியடிப்போம் என்று சபரிமலை விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை விடுத்துள்ளது. 
இந்துத்வா அமைப்புகளின் அராஜகத்தை அரசியல் ரீதியாக முறியடிப்போம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை 

சென்னை: இந்துத்வா அமைப்புகளின் அராஜகத்தை அரசியல் ரீதியாக முறியடிப்போம் என்று சபரிமலை விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடபாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

சபரிமலை ஜயப்பன் கோவிலில் வழிபாடு செய்ய, அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மற்றும் இந்துத்வா அமைப்புகள் கேரள மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும் , கேரள அரசு செயல்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 50 லட்சம் பெண்கள் பங்கேற்கும் மாபெரும் 'பெண்கள் சுவர்' இயக்கம் நடைபெற்றது. இதனால் எழுச்சிபெற்ற இரண்டு பெண்கள் காவல்துறை பாதுகாப்போடு சபரிமலை சென்று வழிபட்டு வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் இந்துத்வா அமைப்புகள் கேரளாவில் மீண்டும் முழு அடைப்பு, வன்முறை என கலவரம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடச்சியாக தமிழகத்தில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள சுற்றுலாத் துறை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியூ ஆகிய அமைப்புகளின் அலுவலகங்கள், கொடி கம்பங்கள், கொடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கோவை பீளமேடு, துளசியம்மன் லே-அவுட் பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டு, கொடியை கிழித்து காலில் போட்டு மிதித்துள்ளனர். அதேபகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியும் எரிக்கப்பட்டுள்ளது.

இந்துமுன்னணி, ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பலின் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்திட எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காமல் வேடிக்கை பார்கின்றது. இனிமேலும் இப்படிப்பட்ட சம்பங்கள் நடைபெறுமெனில் அதற்கு தமிழக அரசே பொறுப்பு. இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் சங்பரிவார அமைப்புகள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தங்களது கொள்கை பலவீனத்தால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வரும் பிஜேபி மற்றும் இந்துத்வா அமைப்புகள் தற்போது அராஜகத்தை கையில் எடுத்துள்ளனர். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக முறியடிக்கும்.

பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்புகளின் இத்தகைய வன்முறையை கண்டித்தும், அதனை முறியடிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com