அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 6.53 கோடியில்: அதிநவீன ஊடுகதிர் நுண்துளை சிகிச்சை மையம் திறப்பு

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 6.53 கோடியில் அதிநவீன ஊடுகதிர் நுண்துளை சிகிச்சை மையம் (கேத் லேப்) மற்றும் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை மீன்வளத்துறை
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 6.53 கோடியில் அதிநவீன ஊடுகதிர் நுண்துளை சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர்,
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 6.53 கோடியில் அதிநவீன ஊடுகதிர் நுண்துளை சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர்,


அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 6.53 கோடியில் அதிநவீன ஊடுகதிர் நுண்துளை சிகிச்சை மையம் (கேத் லேப்) மற்றும் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். 
கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். பொன்னம்பல நமச்சிவாயம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்குப் பிறகு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது, ஸ்டான்லி மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஊடுகதிர் நுண்துளை சிகிச்சை மையம் (கேத் லேப்) அதிநவீனக் கருவிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இம்மையத்தில் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் தலா மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கருவி மூலம் மருந்தைச் செலுத்தி எடுக்கப்படும் நுண்கதிர் படம் மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவை தெளிவாகக் கண்டறிந்து அறுவைச் சிகிச்சையில்லாமல் சிகிச்சை அளிக்க முடியும். 
மேலும் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகள் உடனடியாக அழைத்து வரப்பட்டால் அறுவைச் சிகிச்சையின்றி ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டு இறப்பு பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும். இதனைத் தவிர்க்க அடைப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் இம்மையத்திற்கு அழைத்து வரப்பட்டால் உடனடியாக ஊடுகதிர் நுண்துளை கருவி மூலம் அடைப்பு நீக்க சிகிச்சை அளிக்கும் வசதிகள் இங்கு உள்ளன. கால் அழுகல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். பிரசவத்திற்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு அறுவைச் சிகிச்சையின்றி ரத்தப் போக்கினைத் தடுத்து நிறுத்த முடியும். இதன் மூலம் இதுபோன்ற அவசர காலங்களில் கர்ப்பப்பையை அகற்றுவதைத் தவிர்க்கலாம். 
இதுபோன்ற சிகிச்சை பெற தனியார் மருத்துமனைகளில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய்வரை செலவாகும் நிலையில் இங்கு இலவசமாகவும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியும். இவ்வசதிகள் விழுப்புரம், தருமபுரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் ஏற்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் நா.பாலகங்கா, கதிரியல் துறை தலைவர் டாக்டர் அமர்நாத், மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com