குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் 2.15 லட்சம் வழக்குகள் முடித்துவைப்பு: நீதிபதி கண்டனம்

தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்து 901 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல்


தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்து 901 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளன என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழகம் முழுவதும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்த புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. 
இந்த வழக்கு வெள்ளிக்கிழமையன்று நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்து 901 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 
காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இத்தனை வழக்குகளை முடித்து வைக்க என்ன காரணம், போலீஸார் ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை, போலீஸாரும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒன்றிணைந்து இந்த வழக்குகளை முடித்து வைத்துள்ளார்களா, இந்த புள்ளி விவரங்களைப் பார்த்தால், கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் தமிழகத்தில் 10 லட்சம் வழக்குகளை முடித்து வைத்திருப்பார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 
இந்த விவகாரத்தில் குற்றவியல் நடுவர்களும் தங்களது கடமையைச் சரிவர செய்யாமல் மெத்தனப் போக்குடன் 
செயல்பட்டுள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜனிடம், போலீஸார் இத்தனை வழக்குகளை முடித்து வைத்துள்ளார்களா, இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பினார். 
அதற்கு மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர், ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்து, இருவரும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com