டெண்டர் விவகாரம்: அமைச்சர் பதிலளிக்க உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,


உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், சென்னை,கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர்கள், பினாமிகள் மற்றும் அவரது நண்பர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. 
கோவை மாநகராட்சியில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2015-ஆம் ஆண்டு நவம்பர் வரை திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.66.75 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகள் கேசிபி, எஸ்.பி.பில்டர்ஸ், மற்றும் வரதன் இன்ஃப்ராஸ்டிரக்சர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கேசிபி நிறுவனத்தின் பங்குதாரர்களான கே.சந்திரபிரகாஷ், ராபர்ட் ராஜா ஆகியோர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதே போன்று சென்னை மாநகராட்சியில் ரூ.14 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அமைச்சரின் நண்பர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஒப்பந்தங்களில் ரூ.20 கோடி வரை வருவாய் ஈட்டிய நிறுவனங்களே பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு, அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேசிபி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் மூலம், அந்த நிறுவனம் கடந்த 2014-2015 ஆம் ஆண்டுகளில் ரூ.100.20 கோடியும், 2015-2016 ஆம் ஆண்டுகளில் ரூ.167.22 கோடியும், 2016-2017-ஆம் ஆண்டுகளில் ரூ.142.24 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது. 
இதன் மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக தமிழக ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறைச் செயலாளர் மற்றும் சென்னை, கோவை மாநகராட்சி ஆணையர்களை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்த நீதிபதிகள், மனு தொடர்பாக அவர்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com