தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,572 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழப்பு: ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தகவல்

தமிழகத்தில் கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.


தமிழகத்தில் கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
திருப்பூர் இருப்புப் பாதை காவல் நிலையம் சார்பில் ஜிஆர்பி ஹெல்ப் செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் செயலியை அறிமுகம் செய்து வைத்து ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது: 
தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மட்டும் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தல், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு செல்லுதல், தண்டவாளத்தில் நடப்பது, சுயபடம் (செல்பி) எடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், 600 பேரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய 2,242 குழந்தைகளை ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மீட்டு மீண்டும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். 
ரயில்களில் பயணிகளுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியைத் தங்களது செல்லிடப்பேசியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், இலவச அழைப்பு எண் 1512 க்கும் தகவல் கொடுக்கலாம். அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தும் விதமாக ரயில்வே காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில், ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.வெற்றிவேந்தன், திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் சுனில் தத், கோவை ரயில்வே காவல் ஆய்வாளர் எம்.லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com