பிளாஸ்டிக் வகையிலான பிஸ்கெட் உறைகளுக்கும் தடையா?: அமைச்சர் கருப்பணன் விளக்கம்

பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பிஸ்கெட் உறைகளுக்கும் தடை உண்டா என்பதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்தார்.
பிளாஸ்டிக் வகையிலான பிஸ்கெட் உறைகளுக்கும் தடையா?: அமைச்சர் கருப்பணன் விளக்கம்


பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பிஸ்கெட் உறைகளுக்கும் தடை உண்டா என்பதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் விளக்கம் அளித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கீதா ஜீவன் பேசியது:
2013-இல் அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. பொது மக்களின் போராட்டத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனினும், நீதிமன்றத்தின் மூலம் பழையபடி ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது. 
அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்ததில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. சாதாரண வியாபாரிகளின் பிளாஸ்டிக் உறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், பிஸ்கெட் மற்றும் நொறுக்குத் தீனி போன்றவை பழைய முறையில் பிளாஸ்டிக் உறையிலேயே விற்கப்படுகின்றன. இதற்குத் தடை உண்டா இல்லையா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்றார்.
அப்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் குறுக்கிட்டு கூறியது: பிளாஸ்டிக் தடை விதிப்பில் எந்தக் குழப்பமும் இல்லை. பொது மக்களிடம் இது நன்மதிப்பைத்தான் பெற்றுள்ளது. 2018-மே மாதத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை என அறிவிக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு மேலாக அவகாசம் அளிக்கப்பட்டு, இப்போதுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கீதா ஜீவன்: பிஸ்கெட் உறை உள்ளிட்டவைக்கும் தடை உண்டா? இல்லையா?
அமைச்சர் கருப்பணன்: தற்போது 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அது விரைவில் அமலுக்கு வரும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com