பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்குவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்குவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழக அரசு,
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்குவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை


சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்குவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழக அரசு, திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்தே, தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு தொகையான ரூ.1000 வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தை கவரில் வைத்து வழங்காமல் வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும். மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பின்னரே வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் எளிய முறையில் ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம் என்பதை உள்ளூர் நாளிதழ், தொலைக்காட்சிகளில் மாவட்ட ஆட்சியர்கள் விளம்பரப்படுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு வந்த குடும்ப அட்டைதாரர்கள் எவரையும் பொங்கல் பரிசு இல்லாமல் திருப்பி அனுப்பக்கூடாது.

விநியோக விவரத்தை காவல்துறையினருக்கு முன்கூட்டியே தெரிவித்து காவல்துறை பாதுகாப்பையும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுப்பெற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் விநியோகம் குறித்த புகார்களை பெற கட்டுப்பாட்டறை அமைக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டறையில் இருந்து அனுப்பப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்று இந்த திட்டத்தை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் ஆயிரம் ரூபாய் நிதியை விநியோகம் செய்யபடுவதை கண்காணிக்க உரிய ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும். தேவைப்படும் நிதியை தினந்தோறும் ரொக்கமாக நியாய விலைக்கடைகளுக்கு வழங்க வேண்டும்.

வரும் 7 ஆம் தேதி தொடங்கி பொங்கல் பண்டிகை நாளுக்கு முன்னால் அனைவருக்கும் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் 10 மாநகராட்சிகளில் இப்பணியை விரைந்து முடிக்க ஏதுவாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com