பொது இட ஆக்கிரமிப்பை அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

பொது இடங்களில் ஆக்கிரமிக்கும் செயலை தெய்வமாக இருந்தாலும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ
பொது இட ஆக்கிரமிப்பை அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்


பொது இடங்களில் ஆக்கிரமிக்கும் செயலை தெய்வமாக இருந்தாலும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது. மதச்சார்பற்ற இந்திய நாட்டின் அழகே, வேற்றுமையில் ஒற்றுமைதான். அதை அனைவரும் மதித்து நடக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என தமிழக பொதுத் (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை கடந்த 1968 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை வலியுறுத்தி கடந்த 1994 ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது. ஆனால் இந்த சுற்றறிக்கைக்கு எதிராக கோவை வருவாய்க் கோட்டாட்சியரின் அலுவலகத்தில் சட்டவிரோதமாக பிள்ளையார் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. எனவே, இந்த சட்டவிரோத கட்டடத்தை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், சில பேராசைக்காரர்களால், நீர்நிலைகள், பொது சாலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏராளமான கோயில்கள் கட்டப்படுகின்றன. இதனை இந்துசமய அறநிலையத்துறை அனுமதிக்கக்கூடாது. இந்த செயலை ஊக்குவிப்பது மத உணர்வுகளைத் தவறாக பயன்படுத்துவதாகிவிடும்.
எனவே அனைவரும் சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும். பிறரது உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். எனவே பொதுச்சாலை, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர், இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோரை எதிர் மனுதாரராகச் சேர்த்தும், தமிழகம் முழுவதும் பொதுச்சாலை, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டும் விசாரணையை வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com