நான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருப்பதற்கான முழு காரணம்: மாணவர்களிடம் பகிந்து கொண்ட ஸ்டாலின்

தான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருப்பதற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து மாணவர்களிடம்  திமுக தலைவர் ஸ்டாலின் பகிந்து கொண்டார்.    
நான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருப்பதற்கான முழு காரணம்: மாணவர்களிடம் பகிந்து கொண்ட ஸ்டாலின்

சங்கரன்கோவில்: தான் இந்த அள்வுக்கு உயர்ந்து வந்திருப்பதற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து மாணவர்களிடம்  திமுக தலைவர் ஸ்டாலின் பகிந்து கொண்டார்.    

திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போதுஅவர் பேசியதாவது:

பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் -தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்த நாள் என்பது ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும் பயன்படக்கூடாது, தனிப்பட்ட அரசியலுக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது அது இளைஞர் சமுதாயத்திற்கும் மாணவர் சமுதாயத்திற்கும் அவர்களுடைய பிறந்த நாள் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு இளைஞர் அணியின் சார்பில் அதற்கென்று ஒரு அறக்கட்டளையை உருவாக்கி நெல்லையில் நடைபெற்ற இளைஞர் அணியினுடைய மாநில மாநாட்டில் அதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அந்த மாநாட்டிற்காக வசூலான தொகையில் செலவு போக மீதம் இருக்கக்கூடிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலமாக வரக்கூடிய வட்டித்தொகையை பயன்படுத்தி மாணவச் செல்வங்களுக்கு – இளைஞர்களுக்கு போட்டிகளை நடத்தி அதன் மூலமாக பரிசுகள் வழங்கிடவேண்டும், ஊக்கத் தொகை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற அந்த எண்ணத்தோடு அந்தப் பணியை ஏறக்குறைய ஒரு 11 ஆண்டு காலமாக இளைஞர் அணி செய்துகொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியும் இந்த ஆண்டு சங்கரன்கோவில் பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

என்றைக்கும் நான் உங்களில் ஒருவனாக வர விரும்புகின்றேன். வரவேண்டும் என்றல்ல அப்படி இருந்தாக வேண்டும். அப்படி இருந்து உங்களோடு பணியாற்ற வேண்டும் என்ற அந்த எண்ணத்தோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன். இன்னும்கூட வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு. நேற்று வரையில் நான் வருவது ஒரு கேள்விக்குறியாக இருந்தது. கேள்விக்குறியல்ல வருவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில்தான் இருந்தது. காரணம் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை. சட்டமன்றப் பணி, நாளைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்ட மன்றத்தில் நான் உரையாற்ற வேண்டும். 

அந்த நிலையில் நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து இரவோடு இரவாக இராஜபாளையத்தில் ஓய்வெடுத்துவிட்டு இன்று காலை இங்கு வந்திருக்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் நான் சென்னைக்குச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றேன். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகின்றேன். 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்றைக்கு தலைவர் என்கின்ற அந்தப் பொறுப்பில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தாலும் ஆனால், இளைஞர் அணியினுடைய சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன் என்று சொன்னால், என்னுடைய வளர்ச்சி என்பது திடீரென்று ஒரு மிகப்பெரிய பொறுப்பிற்கு நான் உடனடியாக வந்துவிடவில்லை, படிப்படியாகத்தான் வளர்ந்து வந்திருக்கின்றேன். அதிலும் என்னுடைய வளர்ச்சி என்பது, எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு மாணவனாக தன்னுடைய பொது வாழ்க்கையை தொடங்கினாரோ, அதேபோல் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவனாக இருந்த போது கோபாலபுரத்தில் இளைஞர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு மூலமாக பொது வாழ்க்கையை தொடங்கி அதற்குப் பிறகு இளைஞர் அணியில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயலாளராக இருந்து இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து வந்திருக்கின்றேன் என்று சொன்னால், இந்த அளவிற்கு நான் உயர்ந்து வந்திருக்கின்றேன் என்பதற்கு காரணம், அதற்கு முழுக்காரணம் இளைஞர் அணியில் அந்தப் பொறுப்பில் இருந்ததுதான். இதை நான் சொல்வதற்குக் காரணம் படிப்படியாகத் தான் வளர்ச்சி இருக்க வேண்டும். 

இன்றைக்கு நான் எவ்வளவு பொறுப்பிற்கு சென்றாலும் இளைஞர் அணி என்று வருகின்றபோது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய அந்த உணர்வைத்தான் நான் பெறுகின்றேன். அந்த இளைஞர் அணி என்பது என்னைப் பொறுத்தவரையில் அதை இளைஞர் அணி என்றுகூட சொல்லமாட்டேன், கழகத்தினுடைய இதய அணி என்று தான் சொல்லத்தோன்றுகின்றது. 

ஏனென்றால் இன்றைக்கு அரசியல்வாதிகளாக இருக்கக்கூடிய எங்களைவிட மாணவர் சமுதாயத்தில் இளைஞர் சமுதாயத்தில் இருக்கக்கூடிய உங்களுக்குத்தான் இன்னும் அதிகமாக அரசியலை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு வந்து சேர்கின்றது என்பதை நாம் மறுத்திட – மறைத்திட முடியாது. 

உங்களை எல்லாம் நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொண்டு. பரிசு பெற்றிருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்லுவதற்கு மட்டுமல்ல, அந்தப் பரிசுகளை பெற முடியாத நிலையில் இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து சொல்லவேண்டியது என்னுடைய கடமை. 

மாவட்ட மாநில அளவில் பரிசு பெற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, தொடர்ந்து இதுபோன்ற தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் நீங்கள் பல முன்னேற்றங்களை பெற வேண்டுமென வாழ்த்தி இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com