சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்துக்கு வேண்டும் சொந்தக் கட்டடம்

  By DIN  |   Published on : 07th January 2019 02:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  KGP

  கிருஷ்ணகிரி: இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதற்கென சொந்த இடம் ஒதுக்கி, கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
   கிருஷ்ணகிரி மாவட்டமானது கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. கற்காலம் முதல் நவீன காலம் வரையில் தொடர் வரலாற்றினைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தில், கல் திட்டைகள், பாறை ஓவியங்கள், பல வகையான புதைச் சின்னங்கள் என ஏராளமாக காணக் கிடைக்கின்றன.
   இந்த மாவட்டத்தின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், 1993 நவ. 8-ஆம் தேதி, கிருஷ்ணகிரியில் அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் 12-ஆவது அரசு அருங்காட்சியகமாகத் தொடங்கப்பட்ட இது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது.
   25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த அரசு அருங்காட்சியகத்தில் கலை, தொல்லியல், மானுடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள வரட்டணப்பள்ளி, கப்பல்வாடி, கத்தேரி, கங்கலேரி, தொகரப்பள்ளி, பையூர், கொக்கிக்கல்போடு, மோதூர், கொல்லஅள்ளி, வெள்ளோலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்ற பழங்காலக் கற்கருவிகள், புதிய கற்காலக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
   இவை மட்டுமல்லாமல், தெருக்கூத்துக் கலைப் பொருள்கள், லம்பாடி பெண்கள் பயன்படுத்தும் ஆடை அணிகலன்கள், இசைக் கருவிகள், இருளர், குரும்பர் இன மக்கள் பயன்படுத்திய பொருள்களும், மனித உடலியல், வரலாற்றுக்கு முற்பட்ட கால விலங்குகள், சூரியக் குடும்பம் ஆகிய காட்சிப் பெட்டிகளின் மாதிரி உருவங்கள் உள்ளன.
   இத்தகைய சிறப்புமிக்க இந்த அரசு அருங்காட்சியகமானது 4,500 சதுர அடி பரப்பளவில் அலுவலகக் கட்டடம், பிரதான காட்சிக் கட்டடம், பழங்குடி மற்றும் குழந்தைகளுக்கான காட்சியகம், சிறப்பு பூங்கா என செயல்பட்டு வருகிறது.
   கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 3 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட நிலையில், 2016-ஆம் ஆண்டில் 6,500 பேரும், 2017-இல் 9 ஆயிரம் பேரும், 2018-இல் 10 ஆயிரம் பார்வையாளர்களும் வருகை புரிந்துள்ளனர். சில வெளிநாட்டுப் பார்வையாளர்களும் பார்வையிட்டுள்ளனர். அதிகளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு படியெடுத்தல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடத்தில் இயங்கிவரும் இந்த அரசு அருங்காட்சியகத்துக்கு வாடகையாக மாதம் ரூ.12,500 வசூலிக்கப்படுகிறது. இந்த அரசு அருங்காட்சியகத்துக்கு பார்வையாளர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி நகரிலோ அல்லது கிருஷ்ணகிரி அணைப்பகுதிலோ சொந்தமாக இடம் ஒதுக்கி, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
   இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் சுகவன முருகன் கூறியது: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இந்த அருங்காட்சியகமானது போதிய இட வசதி இல்லாத நிலையிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அருங்காட்சியத்துக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் வகையில், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே அல்லது கிருஷ்ணகிரி வனச் சரக அலுவலகம் எதிரே அல்லது கிருஷ்ணகிரி அணை அருகே அரசு இடம் ஒதுக்கி சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், இம் மாவட்டத்தின் வரலாற்றை அதிக எண்ணிக்கையிலானோர் அறிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும் என்றார்.
   தற்போது தமிழக அரசு, பள்ளி மாணவ, மாணவிகள், வரலாற்றுப் பதிவுகளை நேரில் கண்டு, அறியும் வகையில் பாடத் திட்டத்தை வடிவமைத்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. இந் நிலையில், கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு அருங்காட்சியகம், 25-ஆம் ஆண்டைக் கொண்டாட, அதற்கு சொந்தக் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்கள் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
   - எஸ்.கே.ரவி
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai