இடைத்தேர்தல் ரத்து: திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும்!

இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ரொக்கம்
இடைத்தேர்தல் ரத்து: திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும்!

    
சென்னை: இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையடுத்து காலியாக இருந்த திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர், அமமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது. 

இதனிடையே, கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து உள்ளதோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தும், தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்திவைக்குமாறு தலைமை தேர்தல் ஆணையம் இன்று காலை உத்தரவிட்டது.

இதையடுத்து, இடைத்தேர்தலையொட்டி அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்படுகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ரூ.1000 திருவாரூர் தொகுதி மக்களுக்கு பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றில் இருந்து அளிக்கப்படவுள்ள பொங்கல் ரொக்கப்பரிசு திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கும் சேர்த்து வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com