திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; எல்லாம் சதி: அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் எல்லாம் சதி வேலை
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; எல்லாம் சதி: அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்


திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் எல்லாம் சதி வேலை என்று அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த எஸ்.காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என விளக்கமான அறிக்கை தாக்கல் செய்யும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்கள், கஜா புயல் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தின. 

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் ரத்து குறித்து திருவாரூர் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.காமராஜ் தேர்தல் ரத்து குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்பார்க்கவில்லை.

திட்டமிட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல உள்ளது. அதிமுக, திமுக, பாஜகவின் திட்டமிட்ட சதி இது. அவர்கள்தான் தேர்தலை பார்த்து பயந்தனர்.

தோல்வி பயம் காரணமாக தேர்தலை சந்திக்க அச்சம் கொண்டனர். தேர்தலுக்கு எதிராகவும் மனு அளித்து இருந்தனர். இப்போது அவர்கள் திட்டமிட்டபடி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com