Enable Javscript for better performance
கோவை அருகே காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    கோவை அருகே காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

    By DIN  |   Published on : 08th January 2019 01:28 AM  |   அ+அ அ-   |    |  


    கோவை அருகே காரில் கொண்டு வரப்பட்ட , தங்க நகைக் கடைக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மற்றொரு காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை கொள்ளையடித்துச் சென்றது. 
    கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர்கள் சி.ஆர்.அர்ஜுன் (22), டி.எஸ்.வில்ஃபிரட் (31). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள பிரபல தங்க நகைக் கடையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும், கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள தங்களது நிறுவனத்தின் மற்றொரு கிளையில் இருந்து கோவை கிளைக்குத் தேவையான ரூ.98.50 லட்சம் மதிப்புள்ள 3.1 கிலோ தங்க நகைகள் மற்றும் 243 கிராம் வெள்ளிப் பொருள்களுடன் நிறுவனத்துக்குச் சொந்தமான காரில் திங்கள்கிழமை காலை வந்துள்ளனர். 
    கேரளத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழைந்து நவக்கரை எனும் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையை இவர்கள் வாகனம் அடைந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று அர்ஜுன், வில்ஃபிரட் பயணித்த கார் மீது மோதியது. இதில் இவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுள்ளது. அப்போது மற்றொரு கார் இவர்களது வாகனத்தின் முன்புறமாக மறித்து நின்றுள்ளது.
    இதையடுத்து அந்த இரு கார்களிலும் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த 10 பேர் கொண்ட கும்பல், காரில் இருந்த அர்ஜுன், வில்ஃபிரட் ஆகியோரிடம் அவர்களது கார் சாவியைத் தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு இருவரும் மறுத்ததையடுத்து அந்தக் கும்பல், அர்ஜுனையும், வில்ஃபிரட்டையும் சரமாரியாகத் தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் சாலையின் ஓரம் தூக்கி வீசிவிட்டு தங்க நகைகள் இருந்த காருடன் அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் அர்ஜுன், வில்ஃபிரட் ஆகியோர் புகார் தெரிவித்தனர். 
    புகாரில், நகைகளைத் திருடிச் சென்ற கும்பல் தங்களது நிறுவனத்தின் காரை, பாலக்காட்டில் இருந்து பின்தொடர்ந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவ நடந்த இடம், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் இருமாநில எல்லையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல கோவை மாநகர், திருப்பூர், நீலகிரி மாவட்ட காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு எல்லைகள் உஷார் செய்யப்பட்டன. இதன்பேரில் மூன்று மாவட்ட எல்லைகளிலும் வாகனச் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
    இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கோவையில் உள்ள இந்த நிறுவனத்துக்கு அதன் பிற கிளைகளில் இருந்து தங்க நகைகள் அடிக்கடி எடுத்து வரப்படுவது வழக்கம். இதுகுறித்து நன்கு அறிந்த நபர்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். எனவே, இந்த நிறுவனத்தில் இதற்கு முன்னர் பணியாற்றிய நபர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா எனும் கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்றனர்.
    இந்தச் சம்பவம் குறித்து தங்க நகைக் கடையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ்.கல்யாணராமன் கூறியுள்ளதாவது:
    ரூ.98.05 லட்சம் மதிப்புள்ள நகைகள் முறையான ஆவணங்களுடன்தான் கேரளத்தில் இருந்து எடுத்து வரப்பட்டன. நகைகளைத் திருடிச் சென்ற நபர்கள் பாலக்காட்டில் இருந்து எங்களது நிறுவனத்தின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்ததாக ஊழியர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் கேரள மாநிலம், பாலக்காடு மற்றும் கோவை கேஜி சாவடி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தரப்பில் இருந்து காவல் துறைக்குத் தேவையான முழு ஒத்துழைப்பும் அளிக்கத் தயாராக உள்ளோம். நகைகள் திருடு போனது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp