Enable Javscript for better performance
தமிழகத்தில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

    By DIN  |   Published on : 08th January 2019 01:11 PM  |   அ+அ அ-   |    |  

    ministers


    தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளதை அடுத்து பாலகிருஷ்ணா ரெட்டியின், எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. 

    கடந்த 1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாகலூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தக் கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தில் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. போராட்டம் நடைபெற்றது பாலகிருஷ்ணா ரெட்டி பாஜக உறுப்பினராக இருந்து வந்தார்.  

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் அவர் 4 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த ராஜிநாமாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக் கொண்டார்.

    இதையடுத்து, முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீண்டும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. அவரது அமைச்சர் பொறுப்பு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, தமிழக சட்டப்பேரவையில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மறைவு காரணமாக, தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.க்களான 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், ஒசூர் தொகுதி பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்.எல்.ஏ பதவியும் பறிபோயுள்ளதால் அவரது ஓசூர் தொகுதியும் காலியாக உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.  

    ஒசூர் தொகுதியில் திராவிடக் கட்சிகள் வென்றதில்லை என்ற வரலாற்று செய்தியை, கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஒசூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று காட்டியவர் பாலகிருஷ்ணா ரெட்டி. அவருக்கு தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அமைச்சரவை இலாகா மாற்றப்பட்டடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவரிடம் இருந்த கால்நடை பராமரிப்புத் துறையானது உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

    அதிமுகவில் தொடரும் சிறை தண்டனையும், ராஜிநாமாவும்: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் 1991 -96 ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா தனது பதவியை ராஜிநாமா செய்தார். பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டார். 

    தற்போது அவரது அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத் தொகையும் அளித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி தண்டணை அளிக்கப்பட்டால் சம்மந்தவர்களின் பதவி உடனடியாக பறிபோகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பாலகிருஷ்ணா ரெட்டி உடனடியாக  தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது எம்.எல்.ஏ பதவியும், அமைச்சர் பதவியும் பறிபோனதுடன் 4 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுகவில் ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் சிறை தண்டனையும், பதவி ராஜிநாமா செய்பவர்களின் பட்டியல் தொடர்வதுடன், ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, தற்போது பாலகிருஷ்ணா ரெட்டி பதவி ராஜிநாமா மற்றும் சிறை தண்டனை பெறும் ஒருவராக உள்ளார். 

    1991 -96 இல் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த செல்வகணபதி, சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், செல்வகணபதி உள்பட 5 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது செல்வகணபதி, திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை வழங்கியதை அடுத்து உடனடியாக அவர் தனது மாநிலங்களை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் என்பதும் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பதவி பறிபோன முதல் தமிழக அரசியல்வாதி செல்வகணபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஏற்கனவே, கஜா புயல் நிவாரண உதவிகளை காரணம் காட்டி, திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்துக்கு கூடுதலாக 21 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp