Enable Javscript for better performance
தமிழகத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் எதிர்ப்போம்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் எதிர்ப்போம்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

    By DIN  |   Published on : 08th January 2019 01:27 AM  |   அ+அ அ-   |    |  

    tn-sec

    சட்டப்பேரவையில் திங்கள்கிழமை மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


    மேக்கேதாட்டு உள்பட தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் எந்தத் திட்டமானாலும் அவற்றை தமிழக அரசு எதிர்க்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி 
    கே.பழனிசாமி கூறினார்.
    ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:
    ஆளுநர் உரையைப் படித்துப் பார்த்தால் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.
    வரிப்பகிர்வில் பாதிப்பு, பகிர்தல் மற்றும் சேவைகள் வரிவிதிப்பு முறையில் கிடைக்க வேண்டிய பங்கு, இழப்பீட்டுத் தொகை முதலியவற்றை வழங்குவதிலே மத்திய அரசு தாமதம் என்றெல்லாம் சுட்டிக்காட்டிவிட்டு கேட்டுக்கொள்கின்றேன், வலியுறுத்துகிறேன், எதிர்பார்க்கின்றேன் என்ற சொற்கள் எல்லாம் மிக மிக மென்மையானவை. 
    இதுபோன்ற நிகழ்வுகளில் கடுமையாகத்தான் நாம் இருந்தாக வேண்டும். மேக்கே தாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்டும் விவகாரத்தில்கூட, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க தமிழக அரசுக்கு மனமில்லை என்றார்.
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி (குறுக்கிட்டு): மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களுடைய எண்ணம். அதைச் சுட்டிக்காட்டிதான் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாத அளவுக்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உச்சநீதிமன்றத்திலேயே தொடுக்கப்பட்டுள்ளது.
    மேக்கேதாட்டு அணையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வலியுறுத்தி வருகிறோம்.
    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு 2007-இல் வந்தது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலே ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 
    அந்த அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருந்தது. அப்போது, காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்குத் தெளிவாக வழங்கப்பட்ட உரிமையை திமுக நிலைநாட்ட தவறிவிட்டது. அந்த காலகட்டத்தில் 60 நாள்கள் கால அவகாசம் இருந்தது. அந்த 60 நாள்களிலே மத்திய அரசிதழில் தீர்ப்பு வெளியிடப்பட்டு இருந்தால், கிட்டத்தட்ட 11 ஆண்டு காலத்துக்கு காவிரியில் நமக்குக் கிடைக்கவேண்டிய நீர் கிடைத்திருக்கும். 
    தற்போது மேக்கேதாட்டுவில் மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, நாடாளுமன்றத்தை நடத்த முடியாத அளவுக்குப் போராடி வருகிறோம். விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது என்று சொன்னால், அதற்காக எத்தகைய பிரச்னைகள் வந்தாலும் அதைச் சந்திக்க அதிமுக அரசு எப்போதும் தயங்கியதில்லை. 
    தமிழகத்துக்கு நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மத்திய அரசுக்குத் துணை நிற்போம். தமிழக மக்களுக்கு எதிராக எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதிமுக அரசு அதை எதிர்க்கும்.
    தமிழக விவசாய மக்களாக இருந்தாலும் சரி, தமிழக மக்கள் வாழ்வாதாரத்துக்கு எந்த ஒரு இடர்பாடு வந்தாலும் அவர்களுக்கு அதிமுக அரசு துணை நிற்கும் என்றார்.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp