Enable Javscript for better performance
பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: மத போதகருக்கு 30 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: மத போதகருக்கு 30 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 08th January 2019 02:49 AM  |   அ+அ அ-   |    |  


    பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 
    இவ்வழக்கில் 3 பெண்கள் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும் மேலும் 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் அரசுப் பள்ளியில் 7, 8-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் காணாமல் போயினர். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திட்டக்குடி காவல் துறையினர் 5-8-14 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், காணாமல்போன 2 மாணவிகளும் திட்டக்குடி காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் 2 மாணவிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல்கள் சிறைபிடித்து, அந்தத் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 
    இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் 4-7-2016 அன்று ஒப்படைக்கப்பட்டது. 
    இந்த வழக்கு தொடர்பாக திட்டக்குடி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த மதபோதகர் பொ.அருள்தாஸ் (60) உள்ளிட்ட 19 பேர் மீது போக்úஸா சட்டம், கடத்தல், சிறுமிகள் விற்பனை, சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மாணவிகளை கடலூர் மாவட்டம் திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சேலம் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கும் விடுதிகளில் வைத்திருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்தது.
    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி டி.லிங்கேஸ்வரன் தீர்ப்பளித்தார். அதில், மகா என்ற மகாலட்சுமியை வழக்கிலிருந்து விடுவித்தார். எஞ்சியவர்களில் 16 பேரை குற்றவாளிகள் என்றும், அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகள் என்றும் அறிவித்தார். 16 பேருக்கான தண்டனை விவரம் ஜன.7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவித்தார்.
    அதன்படி, கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் திங்கள்கிழமை 16 பேர் மீது பதிவான குற்றங்களை விளக்கி அவர்களுக்கு தண்டனை விவரத்தை தனித் தனியாக அறிவித்தார். 
    முக்கிய குற்றவாளிகளான ஆனந்தராஜுக்கு 4 ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.2.10 லட்சம் அபராதமும், ஜெ.பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.4.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பி.அன்பு என்ற செல்வராஜுக்கு 3 ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கலா என்ற மேகலா, லட்சுமி என்ற தனலட்சுமி, பாத்திமா, ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் சிறையும், தலா ரூ.4.24 லட்சம் அபராதமும், மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் சிறையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த அன்பு என்ற அன்பழகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.3.21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மதபோதகர் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    கிரிஜா என்ற ராதா, சர்மிளா பேகம், கவிதா என்ற ராஜலட்சுமி ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இவர்களில் கிரிஜா, சர்மிளாபேகத்துக்கு தலா ரூ.20 ஆயிரமும், கவிதாவுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது. அமுதாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.21 ஆயிரம் அபராதமும், ராதா என்ற ராதிகாவுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
    தீர்ப்பு குறித்து கடலூர் மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞர் க.செல்வப்பிரியா கூறியதாவது: நீதிபதி தனது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார் அவர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp