திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப். 10-இல் மாசித் திருவிழா கொடியேற்றம் பிப். 10-இல் மாசித் திருவிழா கொடியேற்றம்

முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 10-ஆம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப். 10-இல் மாசித் திருவிழா கொடியேற்றம் பிப். 10-இல் மாசித் திருவிழா கொடியேற்றம்


முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தக் கோயிலில் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் புகழ்பெற்றவை. மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பிப்ரவரி 10-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். 5 மணியளவில் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 14-ஆம் தேதி மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. 16-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் கும்ப லக்னத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, 8.45 மணிக்கு ஆறுமுகப் பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து, பிறகு பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் சுவாமி சிவன் அம்சத்தில் தங்கசப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பிப். 17-ஆம் தேதி காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம்வந்து மேலக்கோயில் வந்து அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து, பகல் 11.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதிஉலா வந்து கோயில் சேர்கிறார். பிப். 18-ஆம் தேதி சுவாமி, தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருள, வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். பிப்ரவரி 19-ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று காலை 6 மணியளவில் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம்வந்து காட்சியளிக்கும் தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 20-ம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 21-ஆம் தேதி திருவிழா நிறைவுபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.
நடைதிறப்பு நேரம்: பிப்ரவரி 10, 16 ஆம் தேதிகளில் அதிகாலை 1 மணி. பிப்ரவரி 11, 21 ஆம் தேதிகளில் அதிகாலை 5 மணி. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். மற்ற நாள்களில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com