40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 30 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற
40 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 30 டிஎம்சி தண்ணீர்


முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 30 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சாதனையாக பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. மேலும் டிசம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து மழை இல்லாததால், தற்போது அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 120.95 அடியாக இருந்தது. நீர் இருப்பு 2,816 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 143 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 600 கன அடியாகவும் இருந்தது. 
30 டிஎம்சி தண்ணீர்: கடந்த 2018 ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முதல் போக சாகுபடி முடிவடைந்து, இரண்டாம் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. அதே போல திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளிலும் நன்செய் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான 6 மாதத்தில் 30 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றில், கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு 6 மாதத்தில் 30 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் கேரள அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வந்த போதும், தமிழக பொதுப்பணித்துறையினரின் திட்டமிட்ட செயல்களினால் இவ்வளவு தண்ணீர் பெற்றது சாத்தியமாகியுள்ளதாக அத்துறையினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறியது: கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவில் 30 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும். அணையின் உரிமையை பெறும் விவகாரத்தில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர் என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com