2019ம் ஆண்டு முற்றிலும் வறண்டு போய்விடுமா? என்ன சொல்கிறார் தமிழ்நாட்டின் வெதர்மேன்? (விடியோ)

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான், வானிலை நிலவரம் குறித்த துல்லியமான தகவல்களால் தமிழ்நாட்டின் வெதர்மேனாகவே மாறிவிட்டார்.
2019ம் ஆண்டு முற்றிலும் வறண்டு போய்விடுமா? என்ன சொல்கிறார் தமிழ்நாட்டின் வெதர்மேன்? (விடியோ)

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான், வானிலை நிலவரம் குறித்த துல்லியமான தகவல்களால் தமிழ்நாட்டின் வெதர்மேனாகவே மாறிவிட்டார்.

2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது, பிரதீப் ஜான் வழங்கிய உடனுக்குடனான வானிலை நிலவரங்களால், சமூக வலைத்தளங்களில் அவர் பிரபலமானார். தமிழகமேக் கொண்டாடும் பிரபலமானார்.

அந்த ஆண்டு ஒரே நாளில் அவரது பேஸ்புக் ஃபாலோயர்கள் 1000ல் இருந்து 70 ஆயிரமாக மாறினர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் விவரமாக அறிவிக்கும் முன்னரே, 2016ம் ஆண்டு வர்தா புயல் தொடர்பான தகவல்களை பேஸ்புக்கில் போட்டு அசத்தினார்.

தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடுங்குளிரால் நடுங்கி வருவதால் இது பற்றி நமது எக்ஸ்பிரஸ் குழு அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது பல தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
 

2018ம் ஆண்டு வானிலையில் சொல்லத்தக்க நிகழ்வு ஏதேனும் ஏற்பட்டதா?
2018ம் ஆண்டு வானிலையில் குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகள் ஏற்பட்டன. முதல் விஷயம் கஜா புயல். மிகவும் அரிதாக மேற்கு - தென் திசையில் நகர்ந்து வலுவடைந்தது தான். பொதுவாக மேற்கு தென் திசையில் நகர்ந்தால் வலுவிழக்கும். அந்த வகையில் கஜாவின் பாதையும், வலுவடைந்ததும் மிக மிக அபூர்வம். இதுவரை இருந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கிச் சென்றது கஜா புயல். கஜா புயல் கரையை கடக்கும் வரை வலுவடைந்துகொண்டே போனது. அது கரையைத் தொடும் போது அதன் வேகம் மணிக்கு 150 கி.மீ. என்ற அளவில் இருந்தது. இது மிகவும் அரிதான மற்றும் அபூர்வமான நிகழ்வாகும்.

அடுத்தது கேரள வெள்ளம். நான் பல ஆண்டுகளாக கேரளாவின் மழை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் அரிதாகவே தொடர் மழையால் 200 அல்லது 300 மில்லி மீட்டர் மழை பெய்யும். கேரளாவுக்கு 100 மி.மீ. மழையே கன மழையாக இருந்து வந்துள்ளது. அதுவும் இந்த நிலை 3 அல்லது 4 நாட்கள் நீடித்தால் அதுவும் இதுவரை நிகழாத அபூர்வ நிகழ்வுதான் என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களில் இப்படி திடீரென கடுங்குளிர் வாட்ட என்னக் காரணம்?
இது ஒன்றும் என்றுமே இல்லாத ஒரு காலநிலை அல்ல. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்திய தீபகற்பத்தின் அருகே ஒரு உயர் அழுத்தம் காணப்படுவது வழக்கம்தான். அதே சமயம், வடகிழக்குப் பருவ மழை புத்தாண்டு பிறப்புக்கு முன்பே ஒட்டுமொத்தமாக முடிந்து போய்விட்டது. இதனால் காற்றில் ஈரப்பதம் சற்றும் இல்லை. காற்றில் ஈரப்பதம் இல்லாததால், பனி மூட்டமும், அதன் அழுத்தமும் அதிகரித்து தென்னிந்தியா முழுவதும் இதுபோன்றதொரு குளிர்நிலை வாட்டுகிறது.

இந்த வானிலை மாற்றத்தை நினைத்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா?
கஜா புயலாகட்டும், கேரள வெள்ளமாகட்டும் இது எதையுமே வானிலை மாற்றத்தோடோ, புவி வெப்பமயமாதலோடோ ஒப்பிடவே முடியாது. இதேப்போன்று 1924 மற்றும் 1961ம் ஆண்டுகளிலும் கேரளாவில் வெள்ளம் வந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் புவி வெப்பமயமாதல் குறித்த எந்த அச்சமும் இல்லையே? நகரமயமாதல், நதி மற்றும் நீர் வடிகால்களை அடைத்து கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல காரணிகள்தான் இதற்குக் காரணம். எனவே மக்கள் இயற்கையை மதிக்க வேண்டும், அதனை காப்பாற்ற வேண்டும்.

2019ம் ஆண்டு தமிழ்நாடு வானிலை எப்படி இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?
எப்போதுமே ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மந்தமாகவே இருக்கும். குறிப்பாக தமிழகம், கேரளாவில் மந்தமாகத்தான் இருக்கும். எனவே தற்போது வறண்ட வானிலையே நீடிக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

இந்த முறை ஏன் தமிழகத்துக்கு மழை குறைந்தது?
பொதுவாகவே வடகிழக்குப் பருவ மழையை முன்கூட்டியே கணிப்பது மிகவும் கடினம். அனைவருமே 2018ல் தமிழகத்துக்கு மிகச் சிறப்பான வடகிழக்குப் பருவ மழையாக இருக்கும் என்றுதான் கணித்தோம். வடகிழக்குப் பருவ மழையின் போது கிடைக்கும் மழை அனைத்துமே புயல் சின்னங்களை அடிப்படையாக வைத்துதான் கிடைக்கும். ஒருவேளை புயல்கள் தமிழகத்தைப் புறக்கணித்தால் மழையும் பறிபோகும். ஒரு புயல் சின்னம் ஒருவாக 10 நாட்கள் ஆகும். காற்றில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் இழுத்து ஒரு புயல் சின்னம் உருவாகி அது தமிழகத்தை விட்டு அகண்டு போவது மிகப்பெரிய தோல்வி.

அக்டோபரில் உருவான தித்லியைத் தொடர்ந்து உண்டான லூபன் ஒடிசாவுக்கு நகர்ந்தது. அதன்பிறகு இடைவெளி விட்டு கஜா உருவானது. பிறகு பேத்தை. முற்றிலுமாக தமிழகத்தை விட்டுவிட்டு ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. 4ல் 3 புயல் சின்னங்கள் தமிழகத்தைப் புறக்கணித்துவிட்டதால் மழை வாய்ப்பு குறைந்து போனது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com