சுடச்சுட

    

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஆணையர் குழுவை உயர்நீதிமன்றமே நியமிக்கும்

    By DIN  |   Published on : 11th January 2019 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jalikattu


    மதுரை, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த நீதிமன்றமே ஆணையர் குழுவை நியமிக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.
    மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். நிகழாண்டு ஜன. 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
    இந்நிலையில், மற்றொரு தரப்பினர் சார்பில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை. யாரையும் கலந்தாலோசிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், பங்கெடுப்பும் குறையும். 
    எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிகட்டை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் உடனடியாக ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து பிறபகல் 1 மணிக்கு மூவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
    இதையடுத்து, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றமே ஆணையர் குழுவை அமைக்கும் என்றும், இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai