சுடச்சுட

  

  ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்

  By DIN  |   Published on : 11th January 2019 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதுதாகக் கூறப்படும் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரது வீடுகளில் இருந்து ரூ.4.71 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம், தங்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் தாராளமாக விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமானவரித்துறை, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட 6 அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி வரை விநியோகிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 
  இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
  ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
  இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.முரளிகுமார் பதில்மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதியன்று அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆர்.கே நகர் இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து ரூ. 3 லட்சம், ஜெ.சீனிவாசனிடமிருந்து ரூ.3 லட்சம், கல்பேஷ் எஸ்.ஷாவிடமிருந்து ரூ.1 கோடியே 10 லட்சம், சாதிக் பாட்சாவிடமிருந்து ரூ.6 லட்சம், கார்த்திகேயனிடமிருந்து ரூ.8 லட்சம், நடிகர் ஆர்.சரத்குமாரிடமிருந்து ரூ.11 லட்சம், ஆர்.சின்னதம்பியிடமிருந்து ரூ.20 லட்சம், டாக்டர் செந்தில் குமாரிடமிருந்து ரூ.15 லட்சம், நயினார் முகமதுவிடமிருந்து ரூ.2 கோடியே 95 லட்சம் என ரூ.4.71 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த முக்கிய ஆவணங்களை நாங்கள் எந்த பொது தளங்களிலும் வெளியிடவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆவணங்கள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள ஆவணங்களைத் தங்களுக்குத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai